நிதி மோசடிகள் மற்றும் இணையவழி ஏமாற்று நடவடிக்கைகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில், இலங்கை மத்திய வங்கி (CBSL) “Be Scam Proof” என்ற பெயரில் ஒரு மாத கால தேசிய விழிப்புணர்வு திட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய மத்திய வங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க, சட்டபூர்வ நிதி சேவைகள் குறித்த விழிப்புணர்வு பற்றாக்குறை மற்றும் டிஜிட்டல் மோசடிகளின் அதிகரிப்பு காரணமாக இலங்கையில் நிதி மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.
போலி முதலீட்டு திட்டங்கள், அதிக இலாபம் தருவதாகக் கூறும் ஏமாற்றுத் திட்டங்கள், சட்டவிரோத வைப்புத் தொகை சேகரிப்புகள், பிரமிட் (Pyramid) திட்டங்கள் மற்றும் இணைய மோசடிகள் காரணமாக பலர் பெரும் நிதி இழப்புகளை சந்திப்பதோடு, உத்தியோகபூர்வ நிதி அமைப்புகள் மீதான நம்பிக்கையும் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விழிப்புணர்வு திட்டத்தின் கீழ், போஸ்டர்கள், குறும்படங்கள், கருப்பொருள் பாடல் மற்றும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் வழியாக நாடளாவிய அளவில் பிரச்சாரம் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறிப்பாக கிராமப்புற மக்கள், குறைந்த வருமானக் குடும்பங்கள், முதியவர்கள், இளைஞர்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பணியிடங்களை இலக்காகக் கொண்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
“சந்தேகத்திற்குரிய வாக்குறுதிகளை நம்ப வேண்டாம்; முதலீடு செய்வதற்கு முன் தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்” என பொதுமக்களிடம் ஆளுநர் நந்தலால் வீரசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.





