ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் கும்பலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும், அண்மையில் துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட சந்தேகநபர் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், கொழும்பிலுள்ள பொது மயானமொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல ஆயுதங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தின் (CCIB) காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள மஹாவத்தை சாமர வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்த ஆயுதக் களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்டவற்றில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மினி உஸி (Mini Uzi) ரக தானியங்கி துப்பாக்கி, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, ஒரு மெகசின் மற்றும் மூன்று தோட்டாக்கள் அடங்குகின்றன.
குறிப்பாக, இந்த மினி உஸி ரக ஆயுதம் இலங்கையில் பொலிஸாரால் முதன்முறையாக கைப்பற்றப்பட்டுள்ள ஆயுதமாக கருதப்படுகிறது.
இவ்வாறான ஆயுதம் நாட்டில் இருப்பதாக முன்னர் புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், இதுவரை அதனை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆயுதம் குற்றக்குழுக்களால் எதிரணியினரை அச்சுறுத்தும் நோக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





