அமெரிக்க மத்தியஸ்தத்தில் போர் நிறுத்தத்திற்கு இணக்கம்: இஸ்ரேல் – லெபனான் முக்கிய உடன்பாடு

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகள் போர் நிறுத்த உடன்பாட்டை அமல்படுத்த இணக்கம் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவுடன் இணைந்து வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையின்படி, ஹெஸ்புல்லா அமைப்பு முழுமையாக தாக்குதல்களை நிறுத்துவதும், அதன் உறுப்பினர்கள் தென் லிட்டானி (South Litani) பகுதியிலிருந்து வெளியேறுவதும் இந்த போர் நிறுத்தத்தின் முக்கிய நிபந்தனைகளாகும்.

மேலும், அமெரிக்காவின் வழிகாட்டுதலின் கீழ், லெபனான் இராணுவம் மட்டுமே கட்டுப்பாட்டை மேற்கொள்ளும் வகையில் சில முன்னோடி பாதுகாப்பு மண்டலங்களை (Pilot Zones) விரைவாக உருவாக்க இரு தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டு பின்னர் மே மாதத்தில் நீடிக்கப்பட்டிருந்த போதிலும், எல்லைப் பகுதிகளில் வன்முறைகள் தொடர்ந்து இடம்பெற்று வந்தன.

இந்நிலையில், புதன்கிழமை தெற்கு லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதல்களில் குறைந்தது 6 பேர் உயிரிழந்ததாக லெபனான் பாதுகாப்பு தரப்புகள் தெரிவித்துள்ளன. அதேவேளை, ஹெஸ்புல்லாவால் ஏவப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வான்வழி தாக்குதலை தாம் முறியடித்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் எட்டப்பட்ட உடன்பாட்டின் பின்னர், பெய்ரூட்டின் ஹெஸ்புல்லா கட்டுப்பாட்டிலுள்ள தெற்கு புறநகர்ப் பகுதிகள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் குறைத்ததுடன், எல்லை தாண்டிய தாக்குதல்களை ஹெஸ்புல்லாவும் நிறுத்தியிருந்தது.

மேலும், நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும் நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதற்கும், இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே நேரடி பேச்சுவார்த்தைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூன் 22ஆம் திகதி தொடங்கும் வாரத்தில் அரசியல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான மேலதிக பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாகவும், விரிவான சமாதான உடன்பாட்டை நோக்கி இரு தரப்பும் நகரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore