புதுப்பிக்கப்படும் உயர்தர தொழிற்கல்விப் பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும்

புதிய தலைமுறையின் போக்குகளுக்கும் கைத்தொழில் துறையின் தேவைகளுக்கும் ஏற்ப, புதுப்பிக்கப்படும் உயர்தர தொழிற்கல்விப் பாடத்திட்டத்தையே நாம் உருவாக்க வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

சீர்திருத்தப்பட இருக்கின்ற க.பொ.த உயர்தர தொழிற்கல்விப் பாடத்திட்டத்தின் கட்டமைப்பு மற்றும் தரச் சான்றிதழ் பெறுதலுக்கான செயன்முறை தொடர்பான ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் பெற்றுக்கொள்வதற்காக, நேற்று (03) இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

குறித்த பாடத்திட்ட மறுசீரமைப்பின்போது பயன்படுத்த வேண்டிய அடிப்படை அளவுகோல்கள் மற்றும் அதன் ஊடாக உயர்கல்விப் பிரவேசத்திற்கான புதிய வழிகளைத் தீர்மானிப்பது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

அத்தோடு, முறையாகக் கட்டமைக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கும் செயன்முறை மூலம், இப்பாடத்திட்டத்தைக் கற்கும் மாணவர்களுக்குக் கௌரவமான தொழில் வாழ்க்கையை அமைப்பதற்கான அடித்தளத்தை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து இங்கு வருகை தந்திருந்தவர்களின் கவனம் ஈர்க்கப்பட்டது

மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

இந்தத் தொழிற்கல்விப் பாடத்திட்டத்திற்குப் பெறுமதி சேர்க்கும் வகையில், முறையாக வடிவமைக்கப்பட்ட தெரிவுச் செயன்முறையின் ஊடாக மாணவர்களை உள்ளடக்க வேண்டும். அத்தோடு, உயர்கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தி, ‘நேரடிச் சேர்க்கை’ (Lateral Entry) முறையையும் இதில் உள்வாங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு, சமூகப் பொருளாதார ரீதியாகத் தொழிற்கல்வியின் முக்கியத்துவம் மற்றும் அதன் ஊடாக இலக்கு வைக்கப்படும் வேலைவாய்ப்புத் துறைகள் குறித்துச் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்களை உடனடியாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட பேராசிரியர் ஓ.ஜி. தயாரத்ன பண்டார உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore