அமெரிக்கா அறிவித்துள்ள புதிய தொழிலாளர் தொடர்பான வரிகளில், இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு முன்மொழியப்பட்டுள்ள 12.5% வரி குறித்து சிலோன் வர்த்தக சபை கவலை வெளியிட்டுள்ளது.
வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னர் அறிவிக்கப்பட்ட பரஸ்பர வரிகள் (Reciprocal Tariffs) இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை அமெரிக்காவுடன் சாதகமான வர்த்தக உடன்பாட்டை நோக்கி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த மேலதிக வரி, குறிப்பாக ஏனைய சில நாடுகளுக்கு 10% மட்டுமே வரி விதிக்கப்பட்டுள்ள சூழலில், இலங்கை ஏற்றுமதிகளின் போட்டித்திறனை பாதிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் ஆடை ஏற்றுமதி 7% மற்றும் தேயிலை ஏற்றுமதி 6% வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இந்த புதிய வரி ஏற்றுமதி துறைக்கு மேலும் சவால்களை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்ந்த தொழிலாளர், சுற்றுச்சூழல் மற்றும் நிர்வாக தரங்களைப் பேணும் பொறுப்பான ஏற்றுமதி நாடாக இலங்கை அறியப்படுவதாகவும், நெறிமுறை சார்ந்த வணிக நடைமுறைகள் தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருவதாகவும் வர்த்தக சபை குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த வரிக்கான அடிப்படையை புரிந்துகொள்வதற்கும், இலங்கையின் நிலைப்பாட்டை முன்வைப்பதற்கும் அமெரிக்காவுடன் உயர்மட்டத்தில் உடனடி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை சபை வலியுறுத்தியுள்ளது.
மேலும், முன்மொழியப்பட்டுள்ள வரியை குறைப்பதற்கும், இறுதியில் முழுமையாக நீக்குவதற்கும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்க சந்தை இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு மிக முக்கியமானதாக இருப்பதால், காலதாமதமற்ற நடவடிக்கைகளும் தெளிவான தகவல் பரிமாற்றமும் ஏற்றுமதியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பேணுவதற்கு அவசியம் என சிலோன் வர்த்தக சபை வலியுறுத்தியுள்ளது.





