இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் 94,037 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 71 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 29,962 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், ஜூன் மாதத்தில் 21,533 பேரும், ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 8,701 பேரும் பதிவாகியுள்ளனர்.
மொத்த நோயாளர்களில் 52.9% பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். மாவட்ட ரீதியாக கம்பஹாவில் 20,034 பேரும், கொழும்பில் 18,652 பேரும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் 76 அதிக அபாயமுள்ள MOH பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அழித்து, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்குமாறும், காய்ச்சல் ஏற்பட்டால் தாமதமின்றி மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறும் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.





