ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) நிறைவேற்று சபை பிரதிநிதிகள் குழுவினர், மூன்று நாள் இலங்கை விஜயத்தின் பின்னர் நேற்று (04) டெம்பிள் ட்ரீஸில் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடினர்.
பிரதிநிதிகள் குழுவை வரவேற்ற பிரதமர், இலங்கையில் சிறார்களின் உரிமைகள் மற்றும் நலன்களை மேம்படுத்துவதற்காக UNICEF தொடர்ந்து வழங்கி வரும் ஒத்துழைப்புக்கு நன்றியைத் தெரிவித்தார். மேலும், டிட்வா சூறாவளிக்குப் பின்னர் UNICEF வழங்கிய உடனடி உதவிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளையும் பாராட்டினார்.
சந்திப்பின்போது, சிறுவர்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் தடுப்பது, சிறுவர் போஷாக்குக் குறைபாட்டை நிவர்த்தி செய்வது உள்ளிட்ட விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இலங்கையில் சிறுவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காண்பதில் சட்ட மற்றும் கொள்கை கட்டமைப்புகள் வலுவாக இருந்தாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
இதன்போது, அரசாங்கத்தின் கல்வி மறுசீரமைப்பு திட்டங்களை UNICEF பிரதிநிதிகள் பாராட்டியதுடன், திட்டமிடப்பட்ட இலக்குகளை அடைவதற்கும் சிறுவர்களை மையப்படுத்திய திட்டங்களை முன்னெடுப்பதற்கும் தொடர்ந்தும் ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
இந்த சந்திப்பில் UNICEF நிறைவேற்று சபை தலைவர் Rein Tammsaar, துணைத் தலைவர்கள் Sophia Tesfamariam மற்றும் Alejandra Hernandez Gonzalez உள்ளிட்ட பிரதிநிதிகள், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் பல உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.





