குழந்தைகள் தரமான கல்வியைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், பாதுகாப்பாகவும் அன்புடன் கவனிக்கப்படுவதாகவும் உணரும் இடமாக பாடசாலைகள் இருக்க வேண்டும் என பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
குருநாகலில் அமைந்துள்ள சமோதய வித்தியாலயத்தின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கல்விக் கட்டிடம் மற்றும் கேட்போர் கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கும் நிகழ்வில் இன்று (05) கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“பாடசாலை என்பது குழந்தைகள் அறிவைப் பெறும் இடமாக மட்டுமே இருக்கக் கூடாது. ஒவ்வொரு குழந்தைக்கும் மிகவும் பாதுகாப்பானதும் அன்பானதுமான இடமாக அது அமைய வேண்டும்” என பிரதமர் கூறினார்.
குழந்தைகள் தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை பாடசாலைகளில் செலவிடுகின்றனர் என்பதைக் குறிப்பிட்ட அவர், அக்கறை, கருணை மற்றும் பாசம் நிறைந்த பாடசாலைச் சூழலை உருவாக்குவது அவசியம் என வலியுறுத்தினார்.
அரசாங்கத்தின் கல்வி நோக்கம் குழந்தைகளுக்கு மிகச் சிறந்த கல்வியை வழங்குவதாகும் என்றும், அது கட்டிட வசதிகளால் மட்டும் அளவிடப்படுவதில்லை; கல்வியின் தரமும் உள்ளடக்கமும் உயர்தரமாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
சுமார் 41 மில்லியன் ரூபாய் செலவில் ஏழு மாதங்களுக்குள் நிர்மாணிக்கப்பட்ட இந்த புதிய கட்டிடம் மற்றும் கேட்போர் கூடம் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்வின் நினைவாக பாடசாலை வளாகத்தில் நா மரக்கன்றையும் பிரதமர் நட்டுவைத்தார்.





