“காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைத் தணிக்க நடவடிக்கை எடுப்போம்” என்ற தொனிப்பொருளில் 2026 ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் தின தேசிய நிகழ்வு இன்று (05) ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் டெம்பிள் ட்ரீஸில் நடைபெற்றது.
நிலையான சுற்றுச்சூழலை உறுதிப்படுத்துவதோடு, சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனுடன் தொடர்பாக மே 30 முதல் ஜூன் 5 வரை “காலநிலை வாரம்” பிரகடனப்படுத்தப்பட்டு, நாடளாவிய ரீதியில் பல்வேறு சுற்றுச்சூழல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
நிகழ்வின் போது வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் ரிட்டிகல, அலியவெட்டுனுவெவ, முலகல, கொங்கட்டியாவ மற்றும் கல்லஞ்சிய ஆகிய ஐந்து வனப்பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனங்களாக அறிவிக்கப்பட்டன.
மேலும், தேசிய பசுமை அறிக்கையிடல் வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், மகம மணற்குன்றுகள் சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க பிரதேசமாகவும், குடா புபுல ஊற்று மற்றும் கபுரெல்ல வெந்நீர் சதுப்புநிலம் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகவும் அறிவிக்கப்பட்டன.
அத்துடன் “சோபா” சுற்றுச்சூழல் இதழின் 2026 பதிப்பு, “சோபா கேத” வெளியீடு மற்றும் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவம் தொடர்பான வளநூலும் அறிமுகப்படுத்தப்பட்டன. கார்பன் நடுநிலை நிகழ்வாக இந்நிகழ்வு நடத்தப்பட்டதை உறுதிப்படுத்தும் சான்றிதழும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
காலநிலை மாற்றப் பிரிவு நடத்திய ஓவியப் போட்டி மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை நடத்திய சுற்றுச்சூழலுக்கு உகந்த கண்டுபிடிப்புகள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜனாதிபதி பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.





