போக்குவரத்து விதிமீறலுக்கான நிலுவை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, மொபைல் தொலைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக பரவி வரும் போலியான செய்தி குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை பொலிஸ் திணைக்களத்திலிருந்து அனுப்பப்பட்டதாகத் தோற்றமளிக்கும் இந்தச் செய்தியில், “Smart Tracking Device” மூலம் போக்குவரத்து விதிமீறல் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன்னர் சந்தேகத்திற்கிடமான இணையதளம் ஒன்றின் ஊடாக அபராதத் தொகையை செலுத்த வேண்டும் அல்லது மேன்முறையீடு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பணம் செலுத்தத் தவறினால் மேலதிக அபராதங்கள், தினசரி தாமதக் கட்டணங்கள் விதிக்கப்படுவதுடன், தேசிய சாரதி மற்றும் கடன் தகவல் தரவுத்தளங்களில் தகவல்கள் பதிவுசெய்யப்படும் எனவும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த செய்தி முற்றிலும் போலியானது என்றும், அது இலங்கை பொலிஸாராலோ அல்லது எந்தவொரு அரச நிறுவனத்தாலோ அனுப்பப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இவ்வாறான செய்திகளில் உள்ள இணைப்புகளை (Links) திறக்க வேண்டாமெனவும், தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாமெனவும், உறுதிப்படுத்தப்படாத இணையதளங்கள் ஊடாக எந்தவொரு பணப்பரிவர்த்தனையையும் மேற்கொள்ள வேண்டாமெனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த மோசடி செய்தியில் பயன்படுத்தப்படும் இணையதள முகவரி “.cfd” என முடிவடைவதாகவும், அது இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரி அல்ல என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.





