FIFA தரவரிசையில் 205 இலிருந்து 187 ஆக முன்னேறிய இலங்கை; பொறுமை காக்குமாறு ரசிகர்களிடம் அல்முதைரி வேண்டுகோள்

பூடானுக்கு எதிரான 4-1 வெற்றிக்குப் பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை கால்பந்து அணி FIFA தரவரிசையில் 205ஆவது இடத்திலிருந்து 187ஆவது இடத்திற்கு முன்னேறியிருப்பது அணியின் வளர்ச்சிக்கான தெளிவான சான்று என தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் அப்துல்லா அல்முதைரி தெரிவித்துள்ளார்.

கடந்த காலப்பகுதியில் உயர்ந்த தரவரிசை கொண்ட அணிகளுக்கு எதிராக சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்தியமை, அணியின் தயாரிப்பு மற்றும் நிர்வாகத்தில் தொழில்முறை அணுகுமுறை அதிகரித்தமை, மேலும் ஆசிய கால்பந்தில் உயர்ந்த மட்டத்தில் போட்டியிட முடியும் என்ற நம்பிக்கை வீரர்களிடையே உருவாகியிருப்பது உள்ளிட்ட பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

“உடனடி வெற்றியை எதிர்பார்க்கும் ரசிகர்களின் ஆர்வத்தையும் உணர்வையும் நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், அமைதியாக இருந்து நீண்டகால இலக்கை கருத்தில் கொள்ள வேண்டும்,” என அவர் கூறினார்.

மேலும், தற்போதைய முன்னேற்றம் கண்கூடாக தெரிந்தாலும் பயணம் இன்னும் நீண்டதுதான் என அல்முதைரி வலியுறுத்தினார்.

“இன்னும் எந்த அசாதாரண சாதனையும் நிகழவில்லை. எமக்கு முன்னால் நீண்ட பயணம் உள்ளது. அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது, ஆனால் செய்ய வேண்டிய பணிகள் இன்னும் நிறைய உள்ளன,” என்றார்.

இலங்கை கால்பந்தின் வளர்ச்சிக்காக ரசிகர்கள் தொடர்ந்து பொறுமையுடனும் ஒற்றுமையுடனும் நம்பிக்கையுடனும் அணியை ஆதரிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

“முன்னேற்றம் தென்படுகிறது. ஆனால் சிறந்த காலம் இன்னும் வர வேண்டியுள்ளது,” என அப்துல்லா அல்முதைரி தெரிவித்துள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore