அமெரிக்காவில் H-1B விசா விண்ணப்பங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி Donald Trump அறிமுகப்படுத்திய $100,000 கட்டண விதிமுறையை கூட்டாட்சி நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இந்த தீர்ப்பை அமெரிக்க மாவட்ட நீதிபதி லியோ சோரோகின் வழங்கியுள்ளார். அவர், குடிவரவு கொள்கையில் இத்தகைய மாற்றங்களைச் செய்யும் அதிகாரம் காங்கிரஸுக்கு மட்டுமே உள்ளது என்றும், அதனை நிர்வாகத் துறை ஒருதலைப்பட்சமாக விதிக்க முடியாது என்றும் கூறினார்.
இந்த கட்டணம் ஒரு வகை வரி (tax) போன்று இருப்பதாகவும், அதற்கான அனுமதி சட்டமன்றத்தால் வழங்கப்படவில்லை என்றும் நீதிபதி தனது 42 பக்க தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
H-1B விசா திட்டம் அமெரிக்க நிறுவனங்களுக்கு திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க உதவுகிறது. இதற்காக பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான தகுதி அவசியமாகும்.
இந்த வழக்கு பல மாநில சட்டத்துறை அதிகாரிகள் இணைந்து தாக்கல் செய்திருந்தனர். ட்ரம்ப் நிர்வாகம் இந்த விசா திட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த அதிக கட்டணத்தை முன்வைத்திருந்தது.
நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமெரிக்க நீதித்துறை (Department of Justice) மேல்முறையீட்டு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. மேலும் இந்த தீர்ப்பு தொடர்பான சட்டப் போராட்டம் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த தீர்ப்பு H-1B விசா திட்டத்தில் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும், அமெரிக்க நிறுவனங்களுக்கும் முக்கியமான நிவாரணமாக பார்க்கப்படுகிறது.





