யானைத் தந்தம் மற்றும் சந்தன மரத்தால் செய்யப்பட்ட பேழை ஒன்றை விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவர் நிட்டம்புவ பகுதியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்ததாவது, ஹொரகொல்ல தேசிய பூங்கா அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த ஜூன் 3 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
சோதனையின் போது விற்பனைக்காக வைத்திருந்த குறித்த பேழை சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட பேழை ஆகியவை அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் உடற்பாகங்கள் அல்லது பாதுகாக்கப்பட்ட மரங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களை வைத்திருத்தல், காட்சிப்படுத்தல், போக்குவரத்து செய்தல் அல்லது விற்பனை செய்தல் ஆகியவை விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அழிவின் விளிம்பில் உள்ள விலங்குகள் மற்றும் தாவர இனங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியாக சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.





