போலி விமானி உரிமத்தை பயன்படுத்தி சுமார் 17 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான பயணிகளை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் Air Canada நிறுவனத்தின் முன்னாள் விமானி ஒருவர் மீது கனேடிய பொலிஸார் குற்றவியல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஜெஃப்ரி வால் (Geoffrey Wall) என்ற முன்னாள் விமானி, 2009 முதல் 2025 வரை 900-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை இயக்கியதாகவும், தேவையான உயர்நிலை விமானி உரிமம் (ATPL-A) அல்லது அதற்கான கட்டாயத் தேர்வுகளை ஒருபோதும் நிறைவு செய்யவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த Peel பிராந்திய பொலிஸாரின் துணைத் தலைவர், “இந்த வழக்கின் பின்னணி ஒரு திரைப்படக் கதையைப் போல உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
விமானப்படை தலைமை விமானியாக (Captain) பதவி உயர்வு பெற்ற பின்னரும், Boeing 767, 777 மற்றும் 787 ரக விமானங்களை சுமார் 17 ஆண்டுகள் இயக்கிய அவர், அந்தக் காலப்பகுதியில் சுமார் 3 மில்லியன் கனேடிய டொலர்கள் சம்பளமாக பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு அவரது ஆவணங்கள் வழக்கமான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது உரிம ஆவணங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து Air Canada நிறுவனம் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியது. இதையடுத்து “Project Icarus” என்ற பெயரில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில், Air Canada வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த விமானி வர்த்தக விமானங்களை இயக்குவதற்கான உரிமம் பெற்றிருந்ததுடன், ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் கட்டாய பயிற்சி மற்றும் ஆண்டுதோறும் திறன் மதிப்பீட்டிலும் பங்கேற்று வந்ததால் பயணிகளின் பாதுகாப்பு பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
எனினும், சரியான உரிமம் விமானப் பாதுகாப்பின் மிக முக்கிய அம்சமாகும் என்பதால், இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஜெஃப்ரி வால் மீது மோசடி, போலி ஆவணங்களைப் பயன்படுத்துதல் மற்றும் கள்ள அடையாளங்களை வைத்திருந்தமை உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் எதிர்வரும் ஜூன் 29, 2026 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார்.





