ஹோர்முஸ் தாக்குதலுக்கு பதிலடி: ஜோர்டான் மற்றும் வளைகுடா நாடுகளில் அமெரிக்கத் தளங்களை குறிவைத்ததாக ஈரான் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரில் ஹோர்முஸ் நீரிணை பகுதிக்கு அருகில் அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள மேலும் 21 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) அறிவித்துள்ளது.

ஈரானிய ஊடகங்களின்படி, இந்த தாக்குதல்கள் ஜோர்டான், குவைத் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முன்னதாக, அமெரிக்காவின் Apache ஹெலிகாப்டர் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், கண்காணிப்பு ரேடார்கள் மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்திருந்தது.

இதற்கு பதிலளித்த ஈரான், ஜோர்டானில் உள்ள அல்-அஸ்ராக் (Al-Azraq) அமெரிக்கத் தளத்தின் நான்கு முக்கிய இடங்களை நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் தாக்கியதாகவும், F-35 போர் விமானங்கள் நிறுத்தப்படும் ஹேங்கர்கள் மற்றும் கட்டுப்பாட்டு மையங்களும் இலக்காகக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

அதேவேளை, ஜோர்டான் ஆயுதப்படைகள், ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஐந்து ஏவுகணைகளை இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளன. இந்த நடவடிக்கையால் நாட்டின் எல்லைக்குள் சில சிதைவுகள் விழுந்தபோதிலும், உயிர்சேதமோ சொத்து சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குவைத்தின் Ali Al Salem அமெரிக்கத் தளமும் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ள நிலையில், குவைத் தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் Fifth Fleet கடற்படைத் தளமும் ட்ரோன்கள் மூலம் தாக்கப்பட்டதாக ஈரான் கூறியுள்ளதுடன், மோதல்கள் தொடர்ந்தால் மேலும் கடுமையான பதிலடி வழங்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், ஆரம்பகட்ட மதிப்பீடுகளின்படி ஈரான் ஏவிய பெரும்பாலான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்கப் படையினருக்கோ அல்லது இராணுவத் தளங்களுக்கோ சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் இல்லை என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore