உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் இக்காலத்தில், நாடுகள் பரஸ்பர புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் உரையாடல்கள் மூலம் வலுப்படுத்தி, ஒற்றுமை மற்றும் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும் என சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ வலியுறுத்தியுள்ளார்.
“நாகரிகங்களுக்கிடையேயான உரையாடலுக்கான சர்வதேச தினம்” முன்னிட்டு காணொளி வாயிலாக உரையாற்றிய அவர், நாகரிகங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான சீனாவின் நான்கு அம்சத் திட்டத்தையும் முன்வைத்தார்.
அதன்படி:
பல்வேறு நாகரிகங்களுக்கிடையில் பரஸ்பர மரியாதை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும்.
மக்களை மையமாகக் கொண்ட பரிமாற்றங்கள் மூலம் நாடுகளுக்கிடையேயான நட்பு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்த வேண்டும்.
பாரம்பரிய கலாசாரங்களை தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் சமூக ஊடகங்களின் உதவியுடன் புதுமையாகப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையின் Alliance of Civilizations, UNESCO மற்றும் Forum of Ancient Civilizations போன்ற சர்வதேச தளங்கள் ஊடாக நாகரிகங்களுக்கிடையேயான உரையாடல் அமைப்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
மேலும், உலகின் பல்வேறு நாடுகளுடன் நாகரிக உரையாடல்களை விரிவுபடுத்தவும், ஆட்சிமுறை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு காலத்தின் சவால்களுக்கு கூட்டாக தீர்வு காணவும் சீனா தயாராக இருப்பதாக வாங் யீ தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் சமூக ஊடகங்கள் போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயனுள்ளதாக பயன்படுத்தி, மனித நாகரிகங்களின் பரிமாற்றம், புதுமை மற்றும் கூட்டு வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.





