ஐக்கிய இராச்சியத்தின் வடக்கு அயர்லாந்து தலைநகரான பெல்ஃபாஸ்டில், கத்திக்குத்து தாக்குதலைத் தொடர்ந்து குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.
வட பெல்ஃபாஸ்டில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய 30 வயதுடைய சூடான் நாட்டவருக்கு எதிராக கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நகரின் பல பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், சில இடங்களில் அவை வன்முறையாக மாறியுள்ளன. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதுடன், சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடக்கு அயர்லாந்து பொலிஸ் சேவை (PSNI), தங்களது அதிகாரிகள் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவித்து, பொதுமக்கள் வன்முறைகளில் ஈடுபட வேண்டாமெனவும், சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்புவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கிடையில், அரசியல் தலைவர்கள் வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து அமைதியை நிலைநிறுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளனர். கத்திக்குத்து சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





