அரசாங்கம் அறிமுகப்படுத்திய மூன்று மாத எரிபொருள் சலுகைத் திட்டம் ஜூன் மாத இறுதியுடன் நிறைவடையும் என்றும், அதன் பின்னர் நிலவும் சூழ்நிலையைப் பொறுத்தே அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்றும் நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய அவர், உலக சந்தை எரிபொருள் விலை உயர்வு, அதன் உள்நாட்டு தாக்கம் மற்றும் பொதுமக்கள் மீதான சுமை ஆகியவற்றை கண்காணிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் மூன்று மாதங்களுக்கு அமல்படுத்தப்பட்டதாக கூறினார்.
“இந்த சலுகைகள் மூன்று மாதங்களின் முடிவில் நிறைவடையும். ஆனால் அதன் பின்னர் எதிர்பாராத சூழ்நிலை ஏற்பட்டால், அதை எதிர்கொள்ளவும் தேவையான நிதியை ஒதுக்கவும் அரசு தயாராக உள்ளது,” என அவர் தெரிவித்தார்.
மேலும், ஜூன் 8 ஆம் திகதி வரையிலான அரசின் வருவாய் வசூல் இலக்கை விட 120% ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“எனவே, எதிர்பாராத பொருளாதார சூழ்நிலைகளை சமாளிக்கும் திறன் அரசிடம் உள்ளது,” என்றும் அவர் கூறினார்.
அத்துடன், ஜூன் மாத இறுதிக்குப் பிறகு எரிபொருள் நிவாரணம் தொடர்பான எந்தவொரு புதிய தீர்மானமும் அந்நேரத்தில் நிலவும் பொருளாதார சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.





