முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோவின் மனு ஒத்திவைப்பு

கேரம் போர்டு விவகாரம் தொடர்பாக சட்டமா அதிபரினால் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை நிராகரிக்குமாறு கோரி, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவின் மேலதிக பரிசீலனையை எதிர்வரும் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு பி. குமாரன் ரத்தினம் மற்றும் பிரதீப் ஹெட்டியாரச்சி ஆகியோரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.

இதன்போது, பிரதிவாதி சார்பில் சட்டத்தரணி ரம்ஸி பாச்சாவின் அறிவுறுத்தலின் பேரில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்கையில், இச்சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட தனது கட்சிக்காரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய நீதியரசர்கள் ஆயத்தினால் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அவ்வாறு இருக்கையில், சட்டமா அதிபரினால் அதே குற்றச்சாட்டுகள் தொடர்பாக மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி, ஒரே குற்றச்சாட்டுக்காக இரண்டு முறை வழக்குத் தொடர்வது சட்டத்திற்கு முரணானது என்றும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக மேல் நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தனது கட்சிக்காரர் முதற்கட்ட ஆட்சேபனைகளை எழுப்பிய போதிலும், மேல் நீதிமன்ற நீதிபதி அந்த முதற்கட்ட ஆட்சேபனைகளை நிராகரித்துவிட்டதாக ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.

அதற்கமைய, பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை சட்டத்திற்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மேலதிக பரிசீலனை எதிர்வரும் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டதுடன், அன்றைய தினம் இந்த கோரிக்கைகள் தொடர்பான சட்டமா அதிபரின் நிலைப்பாடு நீதிமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் அலுவலகங்களுக்கு விநியோகிப்பதற்காக சதொச நிறுவனம் ஊடாக 14,000 கேரம் போர்டுகளையும் 11,000 தாயக் கட்டைகளையும் இறக்குமதி செய்து விநியோகித்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 39 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி, முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore