தோஹா டயமண்ட் லீக்கிலும் வெற்றி பெற்ற ருமேஷ் தரங்க!

கட்டாரில் நேற்று (19) நடைபெற்ற தோஹா டயமண்ட் லீக் 2026 ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில், இலங்கையின் ருமேஷ் தரங்க பத்திரகே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அபார வெற்றியைப் பெற்றுள்ளார்.

இரண்டு முறை உலக செம்பியனான கிரெனடாவின் எண்டர்சன் பீட்டர்ஸ், அமெரிக்காவின் கர்டிஸ் தோம்சன், இந்தியாவின் முன்னாள் ஒலிம்பிக் மற்றும் உலக செம்பியனான நீரஜ் சோப்ரா மற்றும் தற்போதைய உலக பட்டத்தை வென்ற டிரினிடாட் மற்றும் டொபாகோவின் கேஷோர்ன் வோல்காட் உள்ளிட்ட ஈட்டி எறிதல் விளையாட்டின் முன்னணி வீரர்களை ருமேஷ் தரங்க தோற்கடித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு ரோமில் அவர் நிலைநாட்டிய உலக அளவில் முன்னிலையிலுள்ள தனது தனிப்பட்ட சிறந்த சாதனையான 92.62 மீட்டரை எட்டவில்லை என்றாலும், தனது நான்காவது முயற்சியில் 88.68 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதலிடத்தைப் பிடித்தார்.

ஆண்டர்சன் பீட்டர்ஸ் 86.38 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாம் இடத்தைப் பிடித்ததுடன், அமெரிக்காவின் உலக வெண்கலப் பதக்க வெற்றியாளரான கர்டிஸ் தாம்சன் மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.

சிறந்த ஃபார்மில் இருக்கும் ருமேஷ் தரங்க பத்திரகே தனது நான்காவது முயற்சியில் 88.68 மீட்டர் தூரத்தை எறிந்ததுடன், எண்டர்சன் பீட்டர்ஸை விட இரண்டு மீட்டருக்கும் அதிகமான தூரம் முன்னிலை பெற்று இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.

பல காயங்கள் காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து, இந்த ஆண்டில் முதன்முறையாக இப்போட்டியில் களமிறங்கிய முன்னாள் ஒலிம்பிக் செம்பியனான நீரஜ் சோப்ரா, 85.69 மீட்டர் தூரம் எறிந்து நான்காவது இடத்தைப் பிடித்தார்.

“இன்று நான் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன்… டயமண்ட் லீக் சுற்றில் பங்கேற்ற முதலாவது இலங்கை வீரராக இங்கு போட்டியிடுவது எனது கனவுகளில் ஒன்றாகும்” என்று 23 வயதான தரங்க தெரிவித்துள்ளார்.

ரோம் டயமண்ட் லீக் போட்டியில் 92.62 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து தடகள உலகையே வியப்பில் ஆழ்த்திய தரங்கவிற்கு, இம்மாதத்தில் கிடைத்த இரண்டாவது டயமண்ட் லீக் வெற்றி இதுவாகும்.

இதேவேளை, இந்த வார தொடக்கத்தில் ருமேஷ் தரங்க உலகத் தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார், இது இலங்கை தடகளத்துறைக்குக் கிடைத்த ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

சமீபத்திய உலகத் தரவரிசையின்படி, அண்மைக்கால சர்வதேச போட்டிகளில் வெளிப்படுத்திய திறமைகளை அடுத்து தரங்க 1,333 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

உலகத் தரவரிசையின்படி, ஜெர்மனி வீரர் ஜூலியன் வெபர் 1,360 புள்ளிகளுடன் ஈட்டி எறிதல் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore