கோட்டவெஹெர பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டமைக்கு தொடர்புடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிப்பதாவது, பலுகொல்ல பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (23) பிற்பகல் நிகவெரட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே 16ஆம் திகதி, கோட்டவெஹெர பொலிஸார் பலுகொல்ல பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, ICE போதைப்பொருளுடன் 19 மற்றும் 28 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
மஹாஉஸ்வெவ பகுதியைச் சேர்ந்த அந்த இருவரும் மே 17ஆம் திகதி நிகவெரட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து மே 21ஆம் திகதி தலா ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த சந்தேகநபர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் போது, ஐந்து பேர் கொண்ட குழுவொன்று சட்டவிரோதமாக ஒன்றுகூடி பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், சம்பவத்தை காணொளியாக பதிவு செய்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பின்னர் அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதுடன், அது தெரணியகல பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வேறொரு சம்பவத்துடன் தவறாக தொடர்புபடுத்தப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நான்கு சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





