(சம்மாந்துறை செய்தியாளர்)
அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டி – 2026 இன் மாகாண மட்டப் போட்டிகள் கடந்த 20 ஆம் திகதி மட்டக்களப்பிலுள்ள புனித மிக்கேல் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றன.
கிழக்கு மாகாணத்தின் 17 கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில், பிரிவு–3 அறிவிப்பாளர் நிகழ்ச்சியில் சம்மாந்துறை கல்வி வலயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) 10 ஆம் தர மாணவி முஹம்மட் பாயிஸ் ஸுஹா முதலிடம் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.

16 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில், சம்மாந்துறை கல்வி வலயத்திலிருந்து தேசிய மட்டத்திற்குத் தெரிவான ஒரே மாணவியாக இவர் சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் சம்மாந்துறை கல்வி வலயத்திற்கும் அம்பாறை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
தொடர்ச்சியான சாதனைகளின் சொந்தக்காரர்
கல்வி மற்றும் இணைப் பாடவிதானச் செயற்பாடுகளில் தொடர்ந்து சிறப்புத் திறமைகளை வெளிப்படுத்தி வரும் முஹம்மட் பாயிஸ் ஸுஹா, 2021 (2022) ஆம் ஆண்டுக்கான தரம்–5 புலமைப்பரிசில் பரீட்சையில் 182 புள்ளிகளைப் பெற்று சம்மாந்துறை கல்வி வலயத்தில் முதலிடத்தைப் பெற்றிருந்தார்.

அத்துடன், 2023 ஆம் ஆண்டு தமிழ் மொழித் தினப் போட்டியின் பிரிவு–2 வாசிப்பு நிகழ்ச்சியில் மாகாண மட்டத்தில் மூன்றாம் இடத்தையும், 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரிவு–3 பேச்சுப் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலிடத்தையும் பெற்று தேசிய மட்டத்தில் பங்கேற்றிருந்தார்.
மேலும், 2024 ஆம் ஆண்டு கணித ஒலிம்பியாட் மாகாண மட்டப் போட்டியிலும் பங்கேற்றிருந்த இவர், 2025 ஆம் ஆண்டு தமிழ் மொழித் தினப் போட்டியின் பிரிவு–3 வாசிப்பு நிகழ்ச்சியில் மாகாண மட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்றிருந்தார். இதற்கு மேலாக, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆங்கில மொழித் தின மாவட்ட மட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று தனது பல்துறை திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.

வெற்றிக்குப் பின்னணியில் ஆசிரியர்களின் வழிகாட்டல்
இம்முறை நடைபெற்ற அறிவிப்பாளர் போட்டியில் வெற்றிபெறுவதற்காக மாணவிக்கு மேலதிக பயிற்சிகளையும் தொழில்முறை வழிகாட்டல்களையும் ஆசிரியரும் கவிஞருமான எம்.ஐ. அச்சி முகம்மட் மற்றும் அறிவிப்பாளர் சி.எம்.யூ. தாரிக் ஆகியோர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இம்முறை நடைபெற்ற மாகாண மட்டப் போட்டிகளில், அவரது குடும்பம் மேலும் ஒரு சாதனையைப் பதிவு செய்துள்ளது. மாணவி முஹம்மட் பாயிஸ் ஸுஹாவின் சகோதரியும் அதே பாடசாலையின் தரம்–06 மாணவியுமான முஹம்மட் பாயிஸ் தியாமன்ஹா, பிரிவு–01 பேச்சுப் போட்டி நிகழ்ச்சியில் மாகாண மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இதன்மூலம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள் மாகாண மட்டத்தில் சாதனை படைத்தமை பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளது.
மின்மினி மீட்சி அமைப்பின் கௌரவிப்பு:

மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவான மாணவி முஹம்மட் பாயிஸ் ஸுஹாவை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது.
மின்மினி மீட்சி சமூக சேவை அமைப்பின் ஸ்தாபகரும் சமூக செயற்பாட்டாளருமான மின்மினி மின்ஹா தலைமையிலான நிர்வாகத்தினர் மாணவியின் இல்லத்திற்குச் சென்று வாழ்த்துப் பாமாலை அணிவித்து கௌரவித்ததுடன், அவரது சாதனையைப் பாராட்டியும் வாழ்த்துத் தெரிவித்தனர்.
இதன்போது, தேசிய மட்டப் போட்டியிலும் வெற்றிபெற்று சம்மாந்துறைக்கும் அம்பாறை மாவட்டத்திற்கும் மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என அனைவரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.
“தொடர்ச்சியான முயற்சி, தன்னம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் சாதனை படைத்து வரும் முஹம்மட் பாயிஸ் ஸுஹா, சம்மாந்துறையின் இளம் தலைமுறைக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்” என நிகழ்வில் கலந்து கொண்டோர் பாராட்டுத் தெரிவித்தனர்.






