சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 10 நாட்களில் 5 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் மேல் மாகாணத்திற்கு தொழில், கல்வி மற்றும் சுற்றுலா காரணமாக பயணம் செய்து திரும்பியவர்கள் எனவும் குறிப்பிடப்படுகிறது.
தற்போது பகுதியில் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கான சாதகமான சூழல் காணப்படுவதால், நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
டெங்கு வைரஸைப் பரப்பும் Aedes வகை நுளம்புகள் பகல் வேளையிலேயே அதிகம் கடிக்கும் தன்மை உடையவை என்பதால், பொதுமக்கள் பகல் நேரங்களில் கூடுதல் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
MOH Dr. (Mrs) Nisreen Ziyadh அவர்கள் விடுத்துள்ள வேண்டுகோளில், வீட்டு வளாகங்களையும் வெற்றிடங்களையும் நுளம்புகள் பெருகாத வகையில் சுத்தமாக வைத்திருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் டயர்கள், சிரட்டைகள், உடைந்த கொள்கலன்கள் போன்ற நீர் தேங்கக்கூடிய பொருட்களை உடனடியாக அகற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நுளம்பு கட்டுப்பாடு ஒவ்வொருவரின் சமூகப் பொறுப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக Dharussalam M.V மற்றும் Al Arsath M.V ஆகிய பாடசாலைகளில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
சம்மாந்துறை பகுதியை டெங்கு இல்லாத பகுதியாக மாற்ற பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





