சினிமா பாடலுக்கு இயேசு சொரூபத்தைக் கொஞ்சிய பெண்; வைரல் வீடியோ!

இந்தியாவின் தமிழ்நாடு, நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதிக்கு அருகிலுள்ள புண்ணியவாளன்புரம் வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில், இயேசுவின் திருச்சொரூபத்திற்கு அருகில் அமர்ந்து இளம்பெண் ஒருவர் சினிமா பாடலுக்கு ‘ரீல்ஸ்’ செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையையும், கத்தோலிக்க மக்களிடையே கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

குறித்த புண்ணியவாளன்புரம் தேவாலயத்தில், பக்தர்கள் தங்களின் துன்பங்களையும் துயரங்களையும் இயேசுவிடம் நேரடியாகப் பகிர்ந்துகொள்வது போன்றதொரு உணர்வை ஏற்படுத்துவதற்காக, பெஞ்ச் ஒன்றில் இயேசு அமர்ந்திருப்பது போன்றதொரு தத்ரூபமான திருச்சொரூபம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் மட்டுமன்றி, பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வருகை தரும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்தச் சிலைக்கு முன்பாக முழங்காலிட்டு மெழுகுவர்த்தி ஏந்தி உருக்கமாகப் பிரார்த்தனைகளில் ஈடுபடுவது வழமையாகும்.

இந்நிலையில், தேவாலயத்திற்கு வந்த இளம்பெண் ஒருவர், இந்த இயேசுவின் சிலைக்கு அருகில் அமர்ந்து, சினிமா பாடலொன்றுக்கு வாயசைத்து, இயேசுவை கொஞ்சுவது போல ‘ரீல்ஸ்’ காணொளியொன்றைப் பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, கிறித்தவ மக்களின் மத நம்பிக்கைகளைப் புண்படுத்தும் வகையில் இச்செயல் அமைந்துள்ளதாகப் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

இது குறித்து அலங்கார மாதா அன்பியத்தின் பிரதிநிதி அருள்ஜெக ரூபர்ட் கருத்துத் தெரிவிக்கையில்:

“பக்தர்கள் தங்களின் கவலைகளைச் சொல்லி கண்ணீர் சிந்தி ஜெபிக்கும் புனிதமான இடத்தில், சினிமா பாடலுக்கு டூயட் பாடுவது போல ரீல்ஸ் எடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கிறித்தவர்கள் மட்டுமன்றி, ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்களும் இதற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறான பொறுப்பற்ற செயல்கள் மத ரீதியான முரண்பாடுகளைத் தோற்றுவிக்கக் கூடும் என்பதால், பொலிஸார் சம்பந்தப்பட்ட நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

இவ்விடயம் குறித்து தேவாலய நிர்வாகத்தினரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, இந்த விவகாரம் காரணமாக பொதுமக்களிடையே வீண் மதக் குழப்பங்களோ, முரண்பாடுகளோ ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால், நிலைமையைச் சுமூகமாகக் கையாள்வதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டனர்.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக தேவாலயத் தரப்பிலிருந்து இதுவரை உத்தியோகபூர்வமாக எவ்விதப் முறைப்பாடுகளும் அளிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள தமிழகப் பொலிஸார், சமூக வலைத்தளங்களில் வைரலாகிய காணொளியை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். முதற்கட்ட விசாரணைகளின்படி, குறித்த காணொளியைப் பதிவிட்ட பெண் குமரி மாவட்டம் அழகப்பபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore