நிட்டம்புவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, யானைத் தந்தத்தின் ஒரு பகுதி, தந்தத்தால் செய்யப்பட்ட மோதிரம் மற்றும் யானை வடிவிலான தந்தப் பதக்கம் ஆகியவற்றை வனவிலங்கு அதிகாரிகள் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்துள்ளனர்.
ஹொரகொல்ல தேசிய பூங்கா மற்றும் மேற்கு மாகாண வனவிலங்கு அலுவலக அதிகாரிகள், கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
கோபேய்கனையைச் சேர்ந்த சந்தேகநபர், இந்த பொருட்களை விற்பனை செய்யத் தயாராக இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. யானைத் தந்தப் பொருட்கள் எவ்வாறு அவரிடம் கிடைத்தன என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
கைது செய்யப்பட்ட நபரும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் உடற்பாகங்கள், குறிப்பாக யானைத் தந்தங்களை வைத்திருத்தல், எடுத்துச் செல்லுதல், காட்சிப்படுத்துதல் அல்லது விற்பனை செய்தல் அனைத்தும் சட்டவிரோதமானது என வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மீண்டும் பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது. மேலும், தந்த ஆபரணங்கள் உள்ளிட்ட விலங்கு உடற்பாகங்களின் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.





