உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு கோரி மகளிர் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு வலியுறுத்தல்

உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் பெண்களுக்கு குறைந்தபட்சம் 33 சதவீத பிரதிநிதித்துவத்தை சட்டரீதியாக உறுதிப்படுத்தும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இலங்கை மகளிர் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு (Women Parliamentarians’ Caucus) வலியுறுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி பால்ராஜ் தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில், மாகாணசபைத் தேர்தல்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவம் மற்றும் தேர்தல் முறை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் விசேட பாராளுமன்றக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள பரிந்துரைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

பெண்களுக்கு வேட்பாளர் பட்டியல்களிலும், தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களிலும் குறைந்தபட்சம் 33% பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்யும் சட்ட ஏற்பாடுகள் அவசியம் என குழு வலியுறுத்தியதுடன், இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவுடனும் மேலதிக பேச்சுவார்த்தைகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, வேட்பாளர் பட்டியல்களில் கட்டாய ஒதுக்கீடு, தெரிவான உறுப்பினர்களில் கட்டாய பிரதிநிதித்துவம் அல்லது கலப்பு தேர்தல் முறை உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், பெண்களின் அரசியல் பங்கேற்பை அதிகரிப்பதில் சமூக மனப்பாங்கு, அதிக தேர்தல் செலவுகள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு போன்ற சவால்களும் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டன.

பெண்கள் அரசியலில் அதிகளவில் ஈடுபடுவதற்காக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் மகளிர் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு வலியுறுத்தியுள்ளது. (Newswire)

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore