ஈரானின் தொடர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் சேதமடைந்த குவைத் நாட்டின் மின்சார உற்பத்தி மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குவைத் மின்சாரம், நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் தகவலின்படி, பல மின் உற்பத்தி மற்றும் கடல் நீரை குடிநீராக மாற்றும் (Desalination) நிலையங்களில் தீ விபத்துகள் மற்றும் சேதங்கள் பதிவாகியுள்ளன.
இதன் காரணமாக சில மின் உற்பத்தி அலகுகள் தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க அவசர குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
எனினும், நாடு முழுவதும் பெரிய அளவிலான மின்சாரம் அல்லது குடிநீர் விநியோக தடைகள் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜூலை 17ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலில் முக்கியமான மின் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று சேதமடைந்து தீப்பற்றியதாகவும், பின்னர் இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் மேலும் ஒரு நிலையம் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் குடிநீர் தேவைக்கு பெருமளவில் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நம்பியுள்ள நிலையில், அத்தியாவசிய பொதுமக்கள் கட்டமைப்புகள் மோதல் காலங்களில் எதிர்கொள்ளும் அபாயம் குறித்து கவலைகள் எழுந்துள்ளன.
குவைத், தனது பாதுகாப்புப் படைகள் பல ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இடைமறித்ததாகவும், தாக்குதல்களை கண்டித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.





