சம்மாந்துறையில் கண்புரை சத்திரசிகிச்சை முகாம்: 482 பேருக்கு ஒளிமயமான எதிர்காலம்.

( மின்மினி மின்ஹா )

கிழக்கு மாகாணத்தின் மருத்துவ வரலாற்றில் புதிய மைல்கல்லாகக் கருதப்படும் மாபெரும் இலவச கட்புரை சத்திரசிகிச்சை முகாம், இலங்கை கண் மருத்துவ நிபுணர்கள் கல்லூரியின் “Gift of Vision” (பார்வைப் பரிசு) தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கடந்த ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்றது.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் டீ. பிரபாஷங்கர் தலைமையில் நடைபெற்ற இம்முகாம், கண் சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் குஷான் வட்டுவங்கல மற்றும் திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர். நியாஸ் அஹமட் ஆகியோரின் வழிகாட்டல் மற்றும் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 500 நோயாளிகள் இம்முகாமிற்குத் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 482 பேருக்கு இலவச கட்புரை சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு, பார்வையை மீட்டெடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இச்சத்திரசிகிச்சைகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த அனுபவமிக்க கண் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர்.

முகாமை முன்னிட்டு தேசிய கண் வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலை, அக்கரைப்பற்று, கல்முனை மற்றும் மஹியங்கனை ஆதார வைத்தியசாலைகளிலிருந்து மேலதிக மருத்துவ ஆளணி, சத்திரசிகிச்சை உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதார உதவியாளர்கள், மாணவத் தாதியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் இணைந்து சேவையாற்றினர்.

மேலும், டாக்டர் ஏ. இஸ்ஸடீன் தலைமையிலான சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் முகாமின் ஒருங்கிணைப்பு மற்றும் நோயாளிகளுக்கான வசதிகளை மேற்கொண்டனர்.

அத்துடன் HelpAge Sri Lanka, லயன்ஸ் கழகம் – கோல்டன் சிட்டி ஒப் சம்மாந்துறை, மர்யம்ஸ், நஜா ரெசிடென்ஸ், பாரூக் எரிபொருள் நிரப்பு நிலையம் உள்ளிட்ட அனுசரணையாளர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் ஒத்துழைப்புடன் முகாம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
முகாமின் நிறைவில் கண் மருத்துவ நிபுணர்கள், மருத்துவக் குழுவினர், தன்னார்வலர்கள் மற்றும் அனுசரணையாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore