நாட்டின் பொருளாதாரத்தில் சீரான வளர்ச்சி

முன்னணி அடிப்படை பொருளாதாரக் குறிகாட்டிகள், ஆய்வு முடிவுகள் மற்றும் உத்தியோகபூர்வ மதிப்பீடுகளின் அடிப்படையில், கைத்தொழில் மற்றும் சேவைத் துறைகளின் செயல்திறனைப் பிரதிபலிக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டின் 2ஆம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சீராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை மத்திய வங்கி ஒகஸ்ட்டில் வௌியிட்டுள்ள நாணயக் கொள்கை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் புவிசார் அரசியல் பதற்றங்களால் ஏற்படும் பொருளாதாரப் பக்கவிளைவுகள் முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விடக் குறைவாக உள்ளதால், குறுகிய கால வளர்ச்சிச் சாத்தியக்கூறுகள் பரவலாக நேர்மறையாகவே உள்ளன.

இதற்கிடையில், மேம்பட்டு வரும் உள்நாட்டுத் தேவை மற்றும் தொடர்ச்சியான பேரண்ட பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவற்றின் ஆதரவுடன், மத்திய கால வளர்ச்சிப் பாதை அதன் சாத்தியமான திறனை நோக்கி படிப்படியாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், சமீபத்திய நாணயக் கொள்கை இறுக்கத்தின் தாக்கத்தைப் பகுதியளவில் பிரதிபலிக்கும் வகையில், உள்நாட்டுத் தேவையின் அதிகரிப்பு ஓரளவு மந்தகதியிலேயே இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

புவிசார் அரசியல் முன்னேற்றங்கள், மாறிவரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிலைமைகள் மற்றும் காலநிலை அபாயங்கள் காரணமாக மத்திய கால பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்புகள் அதிக நிச்சயமற்ற தன்மைக்கு உட்பட்டுள்ளன.

மத்திய கிழக்கில் மீண்டும் தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள், உலகளாவிய சக்திவளச் சந்தைகள், வர்த்தகப் பாய்வுகள், விநியோகச் சங்கிலிகள் மற்றும் முதலீட்டாளர்களின் மனநிலை ஆகியவற்றைப் பாதகமாகப் பாதிக்கக்கூடும் என்பதுடன், உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளிலும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

உலகளாவிய வர்த்தகம் மற்றும் கொள்கை நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், இலங்கையின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளின் பொருளாதார முன்னேற்றங்களும் எதிர்வரும் காலத்தில் இலங்கையின் வளர்ச்சிப் பாதையைத் தீர்மானிப்பதாக அமையும்.

அதேவேளையில், மீண்டும் மீண்டும் ஏற்படும் பாதகமான வானிலை அதிர்ச்சிகள் மத்திய மற்றும் நீண்டகால வளர்ச்சியைக் கட்டுப்படுத்தக்கூடும்.

இது நிலையான மற்றும் காலநிலை மீள்திறன் கொண்ட பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொள்கைகளின் அவசியத்தை வலியுறுத்துகிறது.

இந்த பின்னணியில், தற்போது நிலவும் பொருளாதார வளர்ச்சி வேகத்தின் தொடர்ச்சியானது, இலக்கு வைக்கப்பட்ட கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கும் மூலோபாயங்களை உரிய காலத்தில் திறம்பட நடைமுறைப்படுத்துவதிலேயே தங்கியுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore