எல்-நினோ தாக்கம்: 2027 வறட்சியை எதிர்கொள்ள அரசு முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்துகிறது

எதிர்வரும் 2027ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஏற்படக்கூடிய கடுமையான வறட்சியின் தாக்கத்தை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில், எல்-நினோ நிலைமையை எதிர்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் கூட்டம் நேற்று (21) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, தற்போதைய வறட்சியின் தாக்கம், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம், மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்தல் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான நீரை வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புகளின்படி, எதிர்வரும் 2027 பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் கடுமையான வறட்சியான காலநிலை நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலைமை விவசாயம், பெருந்தோட்டத்துறை, நன்னீர் மீன்பிடி, குடிநீர் விநியோகம் மற்றும் மின்சார உற்பத்தி உள்ளிட்ட பல துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அதனை எதிர்கொள்வதற்கான திட்டங்களை முன்கூட்டியே தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

முக்கிய நீர்த்தேக்கங்கள், சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் குளங்களின் நீர் கொள்ளளவை தொடர்ச்சியாக கண்காணிப்பதுடன், வறட்சியால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே அடையாளம் காண வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

நீர்த்தேக்கங்கள் முழுமையாக வற்றிய பின்னர் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதை விட, நீர் விநியோகத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களை முன்கூட்டியே கணித்து, பாதிக்கப்படும் மக்களுடன் கலந்துரையாடி உரிய திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அதேவேளை, எதிர்வரும் பெரும் போகத்திற்குத் தேவையான விதை நெல் மற்றும் உரங்களை உரிய நேரத்தில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. கடந்த யால பருவத்தில் முன்னெச்சரிக்கையுடன் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக பயிர்ச் சேதங்கள் குறைந்த மட்டத்தில் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகும் மழையை அதிகபட்சமாக பயன்படுத்தி விவசாய நிலங்களைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபை இணைந்து செயற்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வறட்சியால் நன்னீர் மீன்பிடித்துறை மற்றும் மீனவ சமூகங்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கான திட்டங்களைத் தயாரிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெருந்தோட்டத்துறை மற்றும் வனவிலங்கு பகுதிகளில் உள்ள விலங்குகளின் நீர்த் தேவைகள் குறித்தும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

இதனிடையே, நீர்மின் உற்பத்தி பாதிக்கப்படக்கூடிய நிலையை கருத்திற்கொண்டு, அடுத்த ஆண்டு பெப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் ஏற்படக்கூடிய மின்சாரத் தேவையை சமாளிக்க மேலதிக மின் உற்பத்தித் திறனைத் திட்டமிட்டு பேணுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

வறட்சியின் தாக்கம் தீவிரமடையும் முன்னரே நீர், விவசாயம், உணவுப் பாதுகாப்பு மற்றும் மின்சாரத் துறைகளில் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை தடையின்றி வழங்குவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore