இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிய ஐபோன் வாங்கித் தருமாறு மகன் கேட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட குடும்பத் தகராறு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழக்கும் சோகத்தில் முடிந்துள்ளது.
சத்ரபதி சம்பாஜிநகர் பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில், 19 வயதுடைய குணால் என்ற இளைஞரும் அவரது தந்தையான 48 வயதுடைய முரளிதர் சாந்த்குடேவும் உயிரிழந்துள்ளனர்.
குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக மகனுக்கு புதிய தொலைபேசியை வாங்கித் தர தந்தை மறுத்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் அருகிலிருந்த உயரமான மலைப்பகுதிக்குச் சென்று தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புப் படையினர், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இளைஞரை பாதுகாப்பாக மீட்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.
சுமார் மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னர், மகனை சமாதானப்படுத்தி மீட்கும் முயற்சியில் தந்தையும் மலையருகே சென்றுள்ளார்.
எனினும், அந்தச் சந்தர்ப்பத்தில் இளைஞர் மலையிலிருந்து கீழே விழுந்ததாகவும், அவரைக் காப்பாற்ற முயன்ற தந்தையும் நிலைதடுமாறி கீழே விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
கணவர் மற்றும் மகன் இருவரும் உயிரிழந்ததை நேரில் கண்ட தாயும் கடுமையான அதிர்ச்சிக்குள்ளாகி மலையிலிருந்து கீழே குதித்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகன் என மூவர் உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





