இரத்மலானை பகுதியில் அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை விற்பனை செய்த சூப்பர் மார்க்கெட் நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இரத்மலானை காலி வீதியில் இயங்கி வரும் Belta Super Mart நிறுவனத்தை நடத்தும் Beliatta Exim Holdings (Pvt) Ltd நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை, கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.
குறித்த நிறுவனத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி / பால் பொன்னி அரிசி ஒரு கிலோகிராம் ரூ.270க்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த அரிசிக்கான அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை ஒரு கிலோகிராமுக்கு ரூ.255 ஆகும். இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.15 அதிகமாக அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, நீதிமன்றம் ரூ.500,000 அபராதம் விதித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அல்லது பால் பொன்னி GR 11 அரிசிக்கான ரூ.255 அதிகபட்ச சில்லறை விலை, 2025 ஒக்டோபர் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.





