மக்களுக்கு மின்சாரக் கட்டண நிவாரணம் வழங்குவதற்காக ரூ.17.213 பில்லியன் நிதி ஒதுக்குவதற்கான 2026ஆம் ஆண்டின் ஐந்தாவது மேலதிக மதிப்பீட்டை நாடாளுமன்றம் இன்று (23) அனுமதித்துள்ளது.
எரிசக்தி அமைச்சுடன் தொடர்புடைய இந்த மேலதிக மதிப்பீடு, நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் பின்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கான நிதி, 2026ஆம் ஆண்டில் பல்வேறு அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தும், இந்த ஆண்டின் இறுதிக்குள் முழுமையாக பயன்படுத்தப்படாது என அடையாளம் காணப்பட்ட நிதியிலிருந்து மீளஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
இந்த நிதி மாற்றம் காரணமாக, 2025ஆம் ஆண்டின் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மொத்த அரச செலவின வரம்பிலும், அரசாங்கத்தின் அதிகபட்ச கடன் பெறும் வரம்பிலும் பாதிப்பு ஏற்படாது என நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த மேலதிக மதிப்பீட்டுக்கு நாடாளுமன்ற பொது நிதிக் குழு நேற்று (22) அனுமதி வழங்கியிருந்த நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் அது நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், ஏற்றுமதி விவசாயப் பயிர்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் ஏற்றுமதி விவசாய ஊக்குவிப்பு (திருத்த) சட்டமூலமும் இன்று நாடாளுமன்றத்தில் திருத்தங்களின்றி நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





