அனோஜனை காப்பாற்ற உயர்மட்ட தூதுக்குழுவை சவூதிக்கு அனுப்ப வேண்டும் – முஜிபுர் ரஹ்மான்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனை காப்பாற்ற, ஜனாதிபதி, பிரதமர் அல்லது குறைந்தபட்சம் வெளிவிவகார அமைச்சர் தலைமையில் உயர்மட்ட தூதுக்குழுவொன்றை சவூதி அரேபியாவுக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இன்று (23) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், துணை சபாநாயகர் தலைமையில் தூதுக்குழுவை அனுப்புவது போதுமானதல்ல எனக் குறிப்பிட்டு, சவூதி அதிகாரிகளுடன் உயர்மட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

அனோஜனின் வழக்கு தொடர்பில் வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார். குறிப்பாக, ஆரம்பத்தில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீடு தொடர்பில் தவறான சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுகள் வெளியாகவில்லை.

அனோஜன் கடந்த ஜூலை மாதம் சவூதியில் ஐந்து வருட சிறைத்தண்டனையும் 30 இலட்சம் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டதாகவும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டின் பின்னர் தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், மரண தண்டனை தொடர்பான உத்தியோகபூர்வ எழுத்துமூல தீர்ப்பு இதுவரை இலங்கை அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படவில்லை.

இலங்கை வெளிவிவகார அமைச்சு, அனோஜனின் வழக்கை நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும், ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக சவூதி அதிகாரிகளுடன் இராஜதந்திர மட்டத்தில் தொடர்புகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

அனோஜனின் வழக்கு தொடர்பான முழுமையான தீர்ப்பை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும், வழக்கின் மேன்முறையீடு மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற சட்ட நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிந்துகொள்ள இது உதவும் எனவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மேலும், சவூதி அரசாங்கத்துடன் முன்னர் தொடர்புகளை கொண்டிருந்த அனுபவமுள்ள முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கிய வகையில் தூதுக்குழுவை அமைத்து, சட்ட மற்றும் இராஜதந்திர ரீதியான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore