நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த எல்ல பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு ரூ.10 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது இந்த முறைகேடு கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு நேற்று (23) பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
எல்ல, புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள குறித்த நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, அப்போது அமுலில் இருந்த 2025 ஏப்ரல் 1ஆம் திகதியிட்ட 2430/15ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ், 1 லீற்றர் போத்தல் குடிநீரின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.100 என நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், அது ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.
குறித்த வழக்கில் நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் ரூ.1,000,000 அபராதம் விதித்துள்ளது.
தற்போதைய அதிகபட்ச சில்லறை விலைகள்
எனினும், வழக்கில் குறிப்பிடப்பட்ட ரூ.100 என்ற விலை தற்போது அமுலில் உள்ள அதிகபட்ச சில்லறை விலை அல்ல என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
2026 ஜூன் 10ஆம் திகதியிட்ட 2492/29ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, உள்நாட்டில் பொதி செய்யப்பட்ட குடிநீர் போத்தல்களுக்கான தற்போதைய அதிகபட்ச சில்லறை விலைகள்:
🔹 500 மி.லீ – 999 மி.லீ: ரூ.80
🔹 1 லீற்றர் – 1.499 லீற்றர்: ரூ.120
🔹 1.5 லீற்றர் – 1.999 லீற்றர்: ரூ.150
🔹 2 லீற்றர் – 2.499 லீற்றர்: ரூ.180
🔹 5 லீற்றர் – 6.999 லீற்றர்: ரூ.400
இதன்படி, 1 லீற்றர் முதல் 1.499 லீற்றர் வரையிலான போத்தல் குடிநீரின் தற்போதைய அதிகபட்ச சில்லறை விலை ரூ.120 ஆகும்.
நுகர்வோருக்கு அறிவுறுத்தல்
போத்தல் குடிநீரை கொள்வனவு செய்யும்போது, அதன் அளவுக்குரிய தற்போதைய அதிகபட்ச சில்லறை விலையை சரிபார்க்குமாறும், செலுத்திய தொகையை உறுதிப்படுத்துவதற்காக பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ளுமாறும் நுகர்வோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், சுற்றுலா விடுதிகள், உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் தங்குமிடங்கள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக பொருட்களை விற்பனை செய்வதைத் தவிர்க்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.
சுற்றுலாப் பகுதிகளில் வியாபாரம் செய்வது உட்பட எந்தச் சூழ்நிலையிலும் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக கட்டணம் அறவிட அனுமதிக்கப்படாது எனவும் அதிகார சபை தெரிவித்துள்ளது.
போத்தல் குடிநீரை அதிக விலைக்கு விற்பனை செய்வது உள்ளிட்ட சந்தை முறைகேடுகள் தொடர்பில் 1977 என்ற குறுந்தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அலுவலக நேரங்களில் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு முறைப்பாடு செய்ய முடியும்.





