கல்கமுவ பகுதியில் சுற்றித்திரியும் ‘கவன்திஸ்ஸ’ என அழைக்கப்படும் யானையின் முன்புற வலது காலில் ஏற்பட்ட காயத்துக்கு அவசர கால்நடை மருத்துவ சிகிச்சைகள் இன்று (24) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நிகவெரட்டிய கால்நடை மருத்துவப் பிரிவின் கால்நடை வைத்தியர் அதசூரிய தலைமையில் காயமடைந்த காலுக்கான ஆரம்பகட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கிடையில், உஸ்கல சியம்பலங்கமுவ குளத்தைச் சுற்றியுள்ள பகுதியில் இன்று காலை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் விசேட குழுவொன்று நடவடிக்கையில் ஈடுபட்டது.
இந்த நடவடிக்கையில் கால்நடை வைத்தியர்கள், வனஜீவராசிகள் அதிகாரிகள் மற்றும் விசேட மருத்துவக் குழுவினர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கவன்திஸ்ஸ யானையின் தற்போதைய உடல்நிலை மதிப்பீடு செய்யப்பட்டு, குறிப்பாக அதன் முன்புற வலது காலில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு தேவையான சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் தலையீட்டுடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும், கால்நடை வைத்திய பணிப்பாளர் டொக்டர் கங்கா வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைய மருத்துவக் குழுவினர் சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கவன்திஸ்ஸ யானையின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தேவையான அனைத்து கால்நடை மருத்துவ நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், சிகிச்சைகள் தொடரும் நிலையில், வனஜீவராசிகள் அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் யானையை தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றனர்.





