இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக நாளை (25) இந்தியாவில் நடைபெறவிருந்த இருதரப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியத் தரப்பில் ஏற்பட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் திட்டமிட்டபடி பேச்சுவார்த்தையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தரப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபடுவது, அவ்வாறு இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது உள்ளிட்ட நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைகள் குறித்து இருதரப்பினரும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துரையாட திட்டமிட்டிருந்தனர்.
🔹 புதிய திகதி பின்னர் அறிவிப்பு
பேச்சுவார்த்தைக்கான புதிய திகதியை இந்தியத் தரப்பு பின்னர் அறிவிக்கும் என கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய திகதி தொடர்பான அறிவிப்பு கிடைத்தவுடன், அதற்கமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சு கூறியுள்ளது.
மேலும், பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழுவின் விபரங்களை இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் பகிர்ந்து கொள்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔹 இலங்கை இரத்து செய்யவில்லை
இதேவேளை, குறித்த பேச்சுவார்த்தையை இலங்கைத் தரப்பு இரத்து செய்யவில்லை என அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தியத் தரப்பில் ஏற்பட்ட தவிர்க்க முடியாத காரணங்களினாலேயே பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.





