இலங்கையில் நீர் வெறுப்பு நோயை (Rabies) முழுமையாக ஒழித்தல், நாய்களைப் பதிவு செய்தல் மற்றும் நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட நோக்கங்களுடன் புதிய சட்டமூலம் ஒன்று இன்று (24) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
நாட்டிலிருந்து நீர் வெறுப்பு நோயை முற்றாக ஒழிக்கும் நோக்கில் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்துதல் மற்றும் அவற்றின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முறைப்படுத்துவது இந்த சட்டமூலத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
மேலும், வணிக நோக்கங்களுக்காக நாய்களைப் பெருக்குவதைக் கடுமையாக ஒழுங்குபடுத்துதல் மற்றும் நாட்டில் நாய்களைப் பதிவு செய்வதற்கான முறையான அமைப்பொன்றை உருவாக்குதல் ஆகியவற்றுக்கும் சட்டமூலம் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் வெறுப்பு நோயை ஒழிப்பதற்காக தேசிய ஆலோசனைக் குழு மற்றும் பிரதேச ஆலோசனைக் குழுக்களை அமைப்பதற்கான ஏற்பாடுகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள நீர் வெறுப்பு நோய் தொடர்பான கட்டளைச் சட்டம் (476ஆம் அதிகாரம்) மற்றும் நாய்கள் பதிவு தொடர்பான கட்டளைச் சட்டம் (477ஆம் அதிகாரம்) ஆகிய பழைய சட்டங்களை நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பான மற்றும் அதனுடன் இணைந்த விடயங்களுக்கு சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளும் வகையிலும் புதிய சட்டமூலம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நாளை (25) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.





