விளையாடிக்கொண்டிருக்கும்போதோ அல்லது உடற்பயிற்சி செய்யும்போதோ இளைஞர்கள் திடீரென மயங்கி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது பதிவாகி வருகின்றன. இவ்வாறான சம்பவங்கள் ஏன் ஏற்படுகின்றன, அவை அனைத்தும் மாரடைப்பால் ஏற்படுகின்றனவா என்பது குறித்து இதய மருத்துவர் பாலமுருகன் விளக்கமளித்துள்ளார்.
சமீபத்தில் சென்னை போரூரில் தந்தையுடன் பேட்மிண்டன் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் இதுதொடர்பான கவனத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.
மாரடைப்பும் திடீர் இதய மரணமும் ஒன்றல்ல
மருத்துவரின் விளக்கப்படி, மாரடைப்பு மற்றும் திடீர் இதய மரணம் இரண்டும் ஒரே நிலை அல்ல.
இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு, இதயத் தசைக்கு போதுமான ரத்தம் கிடைக்காமல் ஏற்படும் பாதிப்பே மாரடைப்பு. அதேவேளை, இதயத்தின் மின் செயல்பாட்டில் திடீர் கோளாறு ஏற்பட்டு இதயத்தின் செயல்பாடு திடீரென நின்றுவிடும் நிலையே திடீர் இதய மரணம் எனப்படுகிறது.
திடீர் இதய மரணம் ஏற்பட்டால் சில நொடிகளிலேயே ஒருவர் சுயநினைவை இழக்கக்கூடும்.
இளைஞர்களுக்கும் ஏற்படுமா?
திடீர் இதய மரணத்திற்கு குறிப்பிட்ட வயது வரம்பு கிடையாது. சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எந்த வயதினருக்கும் இது ஏற்படக்கூடும்.
மரபணு சார்ந்த இதயத் தசை நோய்கள், இதயத்தின் மின் செயல்பாட்டில் ஏற்படும் கோளாறுகள், Brugada Syndrome, Long QT Syndrome, Hypertrophic Cardiomyopathy, ARVC மற்றும் பிறவியிலேயே காணப்படும் சில இதய ரத்தக்குழாய் மாற்றங்கள் போன்றவை இதற்கான காரணிகளாக இருக்கலாம் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு காரணமா?
விளையாட்டு அல்லது உடற்பயிற்சி நேரடியாக இதய நோயை உருவாக்குவதில்லை என மருத்துவர் கூறுகிறார்.
ஆனால், உடற்பயிற்சியின் போது உடலில் அட்ரினலின் சுரப்பு அதிகரித்து இதயத் துடிப்பு வேகமாகும். ஏற்கனவே மறைந்த நிலையில் இருக்கும் இதயத் தசை அல்லது இதய மின் அமைப்பு தொடர்பான பிரச்னைகள் இருந்தால், இந்த அதிகரித்த இதயத் துடிப்பு அவற்றை வெளிப்படுத்தக்கூடும்.
அதேபோல், இதய ரத்தக்குழாய்களில் அதிக அடைப்பு உள்ளவர்களுக்கும் கடுமையான இதயப் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
யார் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்?
அனைவரும் விளையாட்டு அல்லது உடற்பயிற்சிக்கு முன்பு முழுமையான இதயப் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை என மருத்துவர் கூறுகிறார்.
எனினும், குடும்பத்தில் இளம் வயதில் திடீர் மரணம் ஏற்பட்ட வரலாறு உள்ளவர்கள், மரபணு சார்ந்த இதய நோய் உள்ள குடும்ப உறுப்பினர்கள் இருப்பவர்கள் அல்லது குடும்பத்தில் Pacemaker/ICD போன்ற இதய சாதனங்கள் பொருத்தப்பட்டவர்கள் தீவிரமான விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு முன்பு மருத்துவ ஆலோசனை பெறுவது முக்கியம்.
மேற்கொள்ளக்கூடிய பரிசோதனைகள்
தேவைக்கேற்ப ECG, Echocardiogram, இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவுகள் உள்ளிட்ட அடிப்படை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படலாம்.
சிலருக்கு மட்டும் Treadmill Test அல்லது Cardiac MRI போன்ற மேலதிக பரிசோதனைகள் தேவைப்படலாம். Coronary Angiogram அனைவருக்கும் அவசியமான பரிசோதனை அல்ல என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
எந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தக்கூடாது?
உடற்பயிற்சி அல்லது விளையாட்டின்போது,
- நெஞ்சில் அழுத்தம் அல்லது வலி
- மூச்சுத்திணறல்
- தலைசுற்றல்
- மயக்கம்
போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது.
மருத்துவரை அணுகி காரணத்தை கண்டறிந்த பின்னரே மீண்டும் தீவிரமான உடற்பயிற்சி அல்லது விளையாட்டில் ஈடுபடுவது பாதுகாப்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் திடீரென மயங்கி விழுந்தால் என்ன செய்ய வேண்டும்?
விளையாடும்போது ஒருவர் திடீரென மயங்கி விழுந்தால், முகத்தில் தண்ணீர் தெளிப்பதைவிட முதலில் அவர் பதிலளிக்கிறாரா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.
அவர் பதிலளிக்கவில்லை மற்றும் இயல்பாக மூச்சுவிடவில்லை என்றால், உடனடியாக CPR தொடங்க வேண்டும். நெஞ்சின் நடுப்பகுதியில் நிமிடத்திற்கு 100–120 முறை அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அதேவேளை, அவசர மருத்துவ சேவைக்கு உடனடியாக தகவல் வழங்க வேண்டும்.
பொது இடங்களில் AED (Automated External Defibrillator) கருவி இருந்தால், அதன் குரல் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அதை பயன்படுத்தலாம். இக்கருவி அதிர்ச்சி மின்சாரம் வழங்க வேண்டிய சூழ்நிலையை தானாகக் கண்டறிந்து வழிகாட்டும்.
தடுக்க என்ன செய்யலாம்?
குடும்பத்தில் திடீர் மரணம் அல்லது மரபணு சார்ந்த இதய நோய் தொடர்பான வரலாறு உள்ளதா என்பதை அறிந்துகொள்வது முக்கியம்.
மேலும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, புகைப்பிடித்தல் மற்றும் அதிகளவு மதுபானம் அருந்துதல் போன்ற இதய நோய் அபாயக் காரணிகளை கட்டுப்படுத்துவதும் முக்கியமானதாகும்.
குறிப்பு: இது பொதுவான சுகாதாரத் தகவல் மட்டுமே. உடற்பயிற்சியின்போது நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் அல்லது மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியம்.





