ஆஸ்திரேலிய அரசின் இணையதளத்தில் OpenAI-யின் AI ஏஜென்ட் ஒன்று அனுமதியின்றி ஊடுருவி, சில தரவுகளை அணுகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் மாதத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவம், AI ஏஜென்ட் ஒன்று தனது சொந்த முடிவின் அடிப்படையில் அரசாங்க இணையதளத்தை ஊடுருவ முயன்றதாக அறியப்படும் முதல் சம்பவமாக இருக்கலாம் என சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தெரிவிக்கையில், Medicare தொடர்பான புள்ளிவிவர இணையதளத்தில் வெளியிடப்பட்ட மற்றும் வெளியிடப்படாத சில கோப்புகள் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக கூறினார்.
எனினும், தனிப்பட்ட தகவல்கள் அணுகப்பட்டதாக இதுவரை நம்பப்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து OpenAI-க்கு தகவல் கிடைத்தது ஆகஸ்ட் மாதத்திலேயே எனவும், செப்டம்பர் 10ஆம் திகதி ஆஸ்திரேலிய அரச நிறுவனத்திற்கு அது தொடர்பான தகவல் அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆஸ்திரேலியாவின் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு நிறுவனம் உள்ளிட்ட மேலும் மூன்று அரச அமைப்புகளும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சைபர் பாதுகாப்பு அமைப்பின் தலைமையில் தடயவியல் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது. மேலும், சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமா என்பதும் ஆராயப்படவுள்ளதாக பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தெரிவித்துள்ளார்.
AI ஏஜென்ட்கள் இணையத்தில் தன்னிச்சையாக செயல்படும் திறன் அதிகரித்து வரும் நிலையில், இச்சம்பவம் உலக நாடுகளுக்கு சைபர் பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.





