செ. திவாகரன்
2026ஆம் ஆண்டுக்கான சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மத்திய மாகாணத்தின் பிரதான கொண்டாட்ட நிகழ்வுகளை நல்லத்தண்ணி மோகினி எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகில் நடத்துவதற்கு மத்திய மாகாண சுற்றுலாத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய மாகாண ஆளுநர் கலாநிதி ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆரச்சி ஆகியோரின் தலைமையில் குறித்த நிகழ்வுகள் நாளை (29) மற்றும் நாளை மறுதினம் (30) ஆகிய இரு தினங்களில் நடைபெறவுள்ளன.
நோர்வூட் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மவுசாக்கலை நீர்த்தேக்கம், மரேயா (Murray) நீர்வீழ்ச்சி உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களுடன், புனித சிவனொளிபாத மலையை மையமாகக் கொண்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க மத்திய மாகாண சுற்றுலாச் சபை திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக மோகினி எல்ல, கார்ட்மோர் (Gardmore) நீர்வீழ்ச்சி மற்றும் மரேயா நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளில் நீர் விளையாட்டுகள் மற்றும் சாகசச் சுற்றுலா (Adventure Tourism) நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண சுற்றுலாத் திணைக்களம் மற்றும் நல்லத்தண்ணி சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் இணைந்து இந்த இரு நாள் சர்வதேச சுற்றுலா தினக் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.
இதற்கான கள ஆய்வு மற்றும் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக மத்திய மாகாண சுற்றுலாச் சபையின் அதிகாரிகள் கடந்த 27ஆம் திகதி மோகினி எல்ல பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
நல்லத்தண்ணி நகரத்தை மையமாகக் கொண்டு 2026ஆம் ஆண்டுக்கான சுற்றுலா தினக் கொண்டாட்டங்களை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாக நல்லத்தண்ணி சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டபிள்யூ.எம். சாந்த குமார தெரிவித்துள்ளார்.





