அவுஸ்திரேலிய தொழிலதிபருக்குச் சொந்தமான நிறுவனப் பங்குகளை போலி அதிகாரப் பத்திரத்தைப் பயன்படுத்தி விற்பனை செய்து, 21 மில்லியன் ரூபாய் நிதி மோசடி செய்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கொழும்பு மேல் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
நீண்டகாலமாக இடம்பெற்ற வழக்கு விசாரணையின் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொட இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
உதய கம்மன்பிலவுக்கு எதிராக முறைப்பாட்டாளரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட வகையில் நிரூபிக்கப்படவில்லை என நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், குறித்த வழக்கில் இருந்து உதய கம்மன்பிலவை விடுதலை செய்வதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவுஸ்திரேலிய தொழிலதிபரான பிரையன் ஷாடிக் (Brian Shaddick) என்பவருக்குச் சொந்தமான நிறுவனப் பங்குகளை போலி அதிகாரப் பத்திரம் ஒன்றைப் பயன்படுத்தி விற்பனை செய்து 21 மில்லியன் ரூபாய் நிதி மோசடி செய்ததாகக் கூறி, கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் உதய கம்மன்பிலவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.





