அமெரிக்காவின் உயர்மட்ட இராணுவ அதிகாரி இலங்கை வருகை

அமெரிக்க இராணுவத்தின் பசிபிக் கட்டளைப் பிரிவின் (USARPAC) துணைத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஜோயல் “JB” வோவெல், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (29) இலங்கை வந்துள்ளார்.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் இடம்பெறுவதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை வரும் அமெரிக்க இராணுவத்தின் மிக உயர்ந்த பதவி வகிக்கும் அதிகாரி என்ற வகையில், லெப்டினன்ட் ஜெனரல் வோவெல்லின் இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பில் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

அவரது விஜயம் எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், இலங்கையின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளுடன் அவர் சந்திப்புகளை நடத்தவுள்ளார்.

இந்த சந்திப்புகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பு, இராணுவத் தயார்நிலை, இணைந்து செயற்படும் திறன் மற்றும் எதிர்கால கூட்டு இராணுவப் பயிற்சிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்தப் பதிலளிப்பு (HADR) தொடர்பான ஒத்துழைப்பும் கலந்துரையாடப்படவுள்ளது.

பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதில் தொழில்முறை இராணுவப் படைகளின் பங்கு தொடர்பாக, அடுத்த தலைமுறை இராணுவத் தலைவர்களிடமும் லெப்டினன்ட் ஜெனரல் வோவெல் உரையாற்றவுள்ளார்.

இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான வளர்ந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பை பிரதிபலிப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த மே மாதம் இடம்பெற்ற அமெரிக்கா–இலங்கை தரைப்படை பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாகவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு தொடர்பான அமெரிக்காவின் தொடர்ச்சியான ஈடுபாட்டின் ஒரு பகுதியாகவும் இந்த விஜயம் அமைகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore