அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சி சந்தித்துள்ள பின்னடைவு, அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலைத் தாண்டி சர்வதேச அரசியலிலும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக ஈரானுடனான போர் மற்றும் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள், இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் இராணுவ ஆதரவு, ரஷ்யா – உக்ரைன் போரில் அமெரிக்காவின் நிலைப்பாடு ஆகிய முக்கிய விவகாரங்களில் இந்தத் தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என CNN வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது.
ட்ரம்ப் ஜனாதிபதியாகப் பதவியேற்றதிலிருந்து அமெரிக்காவின் பல தசாப்தகால வெளிநாட்டுக் கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி வந்துள்ளார். இதனால் அமெரிக்காவின் நட்பு நாடுகளும் எதிரணி நாடுகளும் வாஷிங்டனின் அடுத்தகட்ட நகர்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, ட்ரம்ப் சர்வதேச விவகாரங்களில் சமரசப் போக்கைக் கடைப்பிடிப்பாரா அல்லது தனது நிலைப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரான்: போர் தொடருமா? பேச்சுவார்த்தை முன்னேறுமா?
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி சந்தித்த பின்னடைவை ஈரான் அரசியல் ரீதியாகத் தனக்குச் சாதகமான நிகழ்வாகப் பார்க்கிறது.
ஈரானுடனான போர் குடியரசுக் கட்சியின் தேர்தல் தோல்விக்குக் காரணமாக அமைந்ததாக ட்ரம்ப் ஒப்புக்கொண்டதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸும், தேர்தல் பின்னடைவுக்கு ஈரான் போர் காரணமாக அமைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
போரினால் ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு அமெரிக்க வாக்காளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், அமெரிக்க அரசாங்கம் தனது மக்களின் விருப்பத்தைப் புறக்கணித்தால் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என சமூக ஊடகத்தில் எச்சரித்துள்ளார்.
எனினும், அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் காரணமாக வாஷிங்டனின் கொள்கை உடனடியாக மாறிவிடும் என ஈரான் எதிர்பார்க்கவில்லை. அமெரிக்காவின் அரசியல் மாற்றங்களைப் பொருட்படுத்தாமல், போருக்கான தயாரிப்புகளையும் இராஜதந்திர முயற்சிகளையும் ஒரே நேரத்தில் முன்னெடுத்து வருவதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் மீது மீண்டும் தீவிரமான தாக்குதல்களை நடத்துவது குறித்து ட்ரம்ப் பரிசீலித்து வருவதாக வெளியான தகவல்கள் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளன. அதேவேளை, உடனடியாகப் போரைத் தீவிரப்படுத்தும் திட்டம் இல்லை எனவும் ட்ரம்ப் சில ஊடகவியலாளர்களிடம் கூறியதாக CNN குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் முன்னெடுப்பதற்கான முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன. கத்தார் மத்தியஸ்தர்களின் ஊடாக இரு தரப்புக்கும் இடையில் முன்மொழிவுகள் பரிமாறப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது தொடர்பான இடைக்கால உடன்படிக்கை, விரிவான அமைதி ஒப்பந்தத்தை விட நடைமுறைக்கு வருவதற்கான சாத்தியம் அதிகம் என சர்வதேச நெருக்கடிகள் குழு மற்றும் Chatham House ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இஸ்ரேல் – அமெரிக்க உறவில் வரலாற்று மாற்றம் ஏற்படுமா?
அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் இஸ்ரேலுக்கும் பெரும் அரசியல் சவாலாக அமைந்துள்ளதாக CNN ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் நாளில் இஸ்ரேலுக்கான அமெரிக்க இராணுவ உதவியைத் திடீரென நிறுத்துவதாக ட்ரம்ப் அறிவித்தமை இஸ்ரேலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
மேலும், அமெரிக்க காங்கிரஸின் இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இஸ்ரேலுக்கான அமெரிக்க ஆதரவு தொடர்பான விவாதங்கள் மேலும் தீவிரமடையக்கூடும்.
காசா போரில் உயிரிழப்புகள் அதிகரித்தமை தொடர்பாக அமெரிக்க ஜனநாயகக் கட்சியினரிடையே இஸ்ரேலுக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. அதேவேளை, இஸ்ரேலுக்கு அமெரிக்கா அளிக்கும் ஆதரவு அளவுக்கு அதிகமானது என குடியரசுக் கட்சியினரின் ஒரு பகுதியினரும் கருதுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் இஸ்ரேலியத் தூதர் மைக்கேல் ஓரன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் இது ஒரு முக்கியமான காலகட்டமாக அமையக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இராணுவ உதவி நிறுத்தப்படுவதுடன் மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் உளவுத்துறைத் தகவல் பரிமாற்றம், அயர்ன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பு போன்ற கூட்டு இராணுவத் திட்டங்களிலும் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சமும் இஸ்ரேலில் நிலவுவதாகக் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.
இதற்கிடையில், ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன்: ட்ரம்பின் அரசியல் பலவீனம் கீவ்வுக்குச் சாதகமா?
ரஷ்யாவுடனான போரில் அமெரிக்காவின் ஆதரவை நம்பியிருக்கும் உக்ரைனுக்கும் அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளன.
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கிக்கும் ட்ரம்புக்கும் இடையிலான உறவு கடந்த சில மாதங்களாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக CNN குறிப்பிடுகிறது.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷ்யாவுடன் சமரசம் செய்ய வேண்டும் என்ற அழுத்தத்தை ட்ரம்ப் செலுத்தி வந்ததாகவும், சில சந்தர்ப்பங்களில் உக்ரைனுக்கு எதிரான கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததாகவும் அந்தக் கட்டுரை தெரிவிக்கிறது.
அதேவேளை, உக்ரைனுக்கு ஆயுதங்கள், நிதி உதவிகள் மற்றும் உளவுத்துறை ஆதரவு தொடர்ந்து தேவைப்படுகின்றன. ஆனால், அமெரிக்காவின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டை மட்டும் நம்பியிருக்க முடியாது என்ற முடிவுக்கு கீவ் வந்துள்ளதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆட்சியில் இருப்பவர் யாராக இருந்தாலும், அந்த அரசாங்கத்துடன் நிலையான மற்றும் இயல்பான உறவுகளைப் பேணுவதற்கு உக்ரைன் முயற்சிக்கும் என அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதிநிதி செர்ஹி கிஸ்லிட்சியா தெரிவித்துள்ளார்.
எனினும், ட்ரம்பின் அரசியல் செல்வாக்கு குறைவடைந்தால் உக்ரைனுக்கு எதிர்காலத்தில் சாதகமான சூழல் உருவாகலாம் எனக் கருதப்படுகிறது.
ஆனால், இதற்கு மாறான ஆபத்தும் காணப்படுகிறது. ட்ரம்பின் அரசியல் அதிகாரம் குறைவடைவதற்கு முன்னர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் போர்க்களத்தில் தமக்குச் சாதகமான முடிவுகளைப் பெறுவதற்காகத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தக்கூடும் என்ற அச்சமும் முன்வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அடுத்தகட்ட நகர்வுகள் உலகிற்கு முக்கியம்
இடைக்காலத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு ட்ரம்பின் உள்நாட்டு அரசியல் நடவடிக்கைகளுக்கு ஜனநாயகக் கட்சியினரால் அதிக சவால்களை ஏற்படுத்தக்கூடும்.
எனினும், அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான பல முடிவுகளை ஜனாதிபதி தனிப்பட்ட அதிகாரத்தின் ஊடாகவும் முன்னெடுக்க முடியும் என்பதால், தேர்தல் முடிவுகள் உடனடியாக அனைத்து சர்வதேசக் கொள்கைகளையும் மாற்றிவிடும் எனக் கூற முடியாது.
ஈரானுடன் போரைத் தொடர்வதா அல்லது பேச்சுவார்த்தை மூலம் தீர்வைத் தேடுவதா, இஸ்ரேலுக்கான ஆதரவை எவ்வாறு கையாள்வது, உக்ரைன் போரில் அமெரிக்காவின் பங்களிப்பு எவ்வாறு அமையப்போகிறது என்பன அடுத்தகட்டத்தில் சர்வதேச அரசியலைத் தீர்மானிக்கும் முக்கியமான விடயங்களாக உள்ளன.
அமெரிக்கத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் உருவாகியுள்ள புதிய அரசியல் சூழல், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய பிராந்தியங்களின் எதிர்கால அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைமைகளில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.





