உக்ரைனின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கமிஷுவாகா (Kamyshuvakha) கிராமத்தில் ரஷ்யப் படைகள் நடத்தியதாகக் கூறப்படும் இரட்டை வான்வழித் தாக்குதலில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இடையிலான சம்பவங்களைப் பதிவு செய்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் உடல் கேமராவில் (Bodycam) பதிவான காணொளியை உக்ரைன் தேசிய பொலிஸார் வெளியிட்டுள்ளனர். குறித்த உத்தியோகத்தரும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவராவார்.
திங்கட்கிழமை இடம்பெற்ற முதலாவது தாக்குதலுக்குப் பின்னர், அப்பகுதி மக்கள் பாதுகாப்புத் தேடி நிலத்தடி தங்குமிடமொன்றுக்குச் செல்வதை அந்தக் காணொளியில் காண முடிகிறது. இதன்போது, மேலும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக வானொலி மூலம் எச்சரிக்கை விடுக்கப்படுவதுடன், மக்களை விரைவாகப் பாதுகாப்பிடத்திற்குச் செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்துகின்றனர்.
மக்கள் குறித்த தங்குமிடத்திற்குள் சென்ற சில விநாடிகளிலேயே அங்கு மற்றுமொரு குண்டுவெடிப்பு இடம்பெறுவதும், தீப்பிழம்புகள் எழுவதும் காணொளியில் பதிவாகியுள்ளன. இதன் பின்னர் காணொளிப் பதிவு முடிவடைகிறது.
உக்ரைனின் தகவலின்படி, மனிதாபிமான உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் ஒன்றுகூடியிருந்த பகுதியில் மொத்தம் ஒன்பது கிளைடிங் குண்டுகள் (Glide Bombs) வீசப்பட்டுள்ளன. அவற்றில் சில 3,000 கிலோகிராம் எடையுடையவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் தங்குமிடம் முற்றாக அழிவடைந்துள்ளதுடன், அங்கு பாரிய பள்ளமொன்றும் ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் மேலும் 30க்கும் அதிகமானோர் சிக்கியிருக்கலாம் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். தொடர்ந்து மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முதலாவது தாக்குதலில் மனிதாபிமான உதவிகளைப் பெற வந்த பொதுமக்கள் இலக்காகியதாகவும், அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் பணியாளர்கள் மற்றும் பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் செலன்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதேவேளை, இந்தத் தாக்குதல் தொடர்பில் ரஷ்ய இராணுவம் இதுவரை பகிரங்கமாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என BBC தெரிவித்துள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள்
இதற்கிடையில், உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்புப் பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் நவம்பர் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் மீண்டும் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சமாதானத் தூதர்களான ஸ்டீவ் விட்கொஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோருடன் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் விரிவான கலந்துரையாடல் நடத்தியதாக செலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போருக்குப் பின்னரான உக்ரைனின் மீள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் தொடர்பாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி, நேட்டோ மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைன் மீது முழுமையான படையெடுப்பை ஆரம்பித்ததிலிருந்து போர் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





