ஐரோப்பாவில் 10க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – விமானங்கள் அவசரமாக தரையிறக்கம்!

ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளுக்கு இடையிலான விமானப் பயணங்களுக்கு இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை மாத்திரம் 10க்கும் மேற்பட்ட விமானங்கள் இந்த மிரட்டல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, அயர்லாந்தின் டப்ளினிலிருந்து இத்தாலியின் ரோம் நோக்கிப் பயணித்த Aer Lingus விமானம் பாதுகாப்பு எச்சரிக்கையைத் தொடர்ந்து பிரான்ஸின் Évreux விமானப்படைத் தளத்திற்குத் திசைதிருப்பப்பட்டது.

பின்லாந்தின் ஹெல்சிங்கியிலிருந்து ரோம் நோக்கிப் பயணித்த Finnair விமானத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, விமானப்படை ஜெட் விமானங்களின் பாதுகாப்புடன் அது ரோம் நகரில் தரையிறங்கியது.

அதேபோன்று, இத்தாலியின் மிலானிலிருந்து போலந்தின் வார்சா நோக்கிப் பயணித்த Wizz Air விமானம் ஆஸ்திரியாவின் வியன்னாவுக்குத் திசைதிருப்பப்பட்டது.

மேலும், வார்சாவிலிருந்து பிரஸ்ஸல்ஸ் நோக்கிப் பயணித்த LOT விமானம் பிரஸ்ஸல்ஸில் தரையிறங்கியதுடன், கோபன்ஹேகனிலிருந்து சோபியா நோக்கிப் பயணித்த Ryanair விமானமும் சோபியாவில் தரையிறங்கியது.

மாட்ரிட்டிலிருந்து சோபியா நோக்கிப் பயணித்த மற்றுமொரு Ryanair விமானமும் சோபியாவில் தரையிறங்கியுள்ளதுடன், லண்டனிலிருந்து சோபியா நோக்கிப் பயணித்த Ryanair விமானம் பல்கேரியாவின் ப்லோவ்டிவ் (Plovdiv) நகருக்குத் திசைதிருப்பப்பட்டுள்ளது.

ப்ராக் நகரை நோக்கிச் சென்ற நான்கு விமானங்களுக்கும் மிரட்டல்

இதற்கிடையில், செக் குடியரசின் தலைநகரான ப்ராக் நகரை நோக்கிப் பயணித்த நான்கு விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் கிடைத்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விமானங்களில் மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் சாதனம் (Improvised Explosive Device) வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் கிடைத்துள்ளதாகவும், குறித்த விமானங்கள் தரையிறங்கிய பின்னர் அனைத்திலும் வெடிபொருள் தொடர்பான சோதனைகள் முன்னெடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், கிடைத்துள்ள மிரட்டல்களின் நம்பகத்தன்மை குறைவாகவே மதிப்பிடப்படுவதாக செக் குடியரசு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னரும் ஏழு விமானங்களுக்கு மிரட்டல்

இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை ஐரோப்பாவில் குறைந்தது ஏழு விமானங்களுக்கு இதேபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்தன. பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் எந்தவொரு விமானத்திலும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

தற்போதைய சம்பவங்கள் தொடர்பில் விமான நிறுவனங்களிடமிருந்து மேலதிக தகவல்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை BBC முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore