இலங்கையின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கில் பறக்கும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள் – இதற்கான காரணத்தை விளக்கும் நிபுணர்கள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கான மஞ்சள் மற்றும் வெள்ளை நிற வண்ணத்துப் பூச்சிகள் கூட்டம் கூட்டமாகப் பறப்பது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கொழும்பு, காலி, இரத்தினபுரி உள்ளிட்ட பல பகுதிகளில் ஒரே திசையில் பெருமளவிலான வண்ணத்துப் பூச்சிகள் பறந்து செல்வதைப் பதிவு செய்த காணொளிகளும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

இந்நிலையில், இந்த இயற்கை நிகழ்வுக்கான காரணம் தொடர்பில் நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர். Fact Crescendo Sri Lanka வெளியிட்டுள்ள ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில், இது பருவகால மழைவீழ்ச்சி, தாவர வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கச் சுழற்சி ஆகியவற்றுடன் தொடர்புடைய இயற்கையான வண்ணத்துப் பூச்சிகளின் இடம்பெயர்வு நிகழ்வாகும்.

எப்போது வண்ணத்துப் பூச்சிகள் இடம்பெயர்கின்றன?

இலங்கையில் வண்ணத்துப் பூச்சிகளின் இடம்பெயர்வு பொதுவாக இரண்டு காலப்பகுதிகளில் இடம்பெறுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, பிரதான இடம்பெயர்வு ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியிலும், சிறிய அளவிலான இடம்பெயர்வு மார்ச் முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியிலும் இடம்பெறுகின்றது.

பருவமழை மாற்றத்தின்போது கிடைக்கும் மழைவீழ்ச்சி, வண்ணத்துப் பூச்சிகளுக்கான உணவுத் தாவரங்கள் மற்றும் முட்டையிடுவதற்கான வாழிடங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது. இதனால் அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

எண்ணிக்கை அதிகரிக்கும்போது, உணவு மற்றும் இனப்பெருக்கத்திற்கான பொருத்தமான தாவரங்களைத் தேடியும், வளங்களுக்கான போட்டியைக் குறைத்துக்கொள்ளவும் அவை வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்கின்றன.

இந்த இடம்பெயர்வில் லெமன் எமிக்ரன்ட் (Lemon Emigrant), மொட்டில்ட் எமிக்ரன்ட் (Mottled Emigrant), லெஸ்ஸர் அல்பட்ராஸ் (Lesser Albatross), கமன் அல்பட்ராஸ் (Common Albatross) உள்ளிட்ட வண்ணத்துப் பூச்சி இனங்கள் காணப்படுகின்றன.

இலங்கையில் வண்ணத்துப் பூச்சிகளின் இடம்பெயர்வுப் பாதைகள்

2024ஆம் ஆண்டு Taprobanica என்ற அறிவியல் ஆய்வுச் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வொன்று, இலங்கையில் வண்ணத்துப் பூச்சிகள் இடம்பெயரும் முக்கிய பாதைகள் குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளது.

சபரகமுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கபில திஸாநாயக்க உள்ளிட்ட ஆய்வாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வில், நாட்டின் 60 இடங்களிலிருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, தென்கிழக்குப் பகுதியிலிருந்து வடமேற்குத் திசையை நோக்கிச் செல்லும் பாதை வண்ணத்துப் பூச்சிகளின் முக்கிய இடம்பெயர்வுப் பாதைகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

குமண தேசிய பூங்கா பகுதியிலிருந்து வில்பத்து பகுதி நோக்கி சுமார் 280 கிலோமீற்றர் தூரத்திற்கு வண்ணத்துப் பூச்சிகள் மூன்று முதல் நான்கு நாட்களில் பயணிப்பதை ஆய்வாளர்கள் அவதானித்துள்ளனர்.

அல்பட்ராஸ் வகை வண்ணத்துப் பூச்சிகளின் சராசரிப் பறக்கும் வேகம் மணித்தியாலத்திற்கு சுமார் 11 கிலோமீற்றர் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

வண்ணத்துப் பூச்சிகள் ஸ்ரீ பாத மலையை நோக்கிச் செல்கின்றனவா?

வண்ணத்துப் பூச்சிகளின் இந்தப் பருவகால இடம்பெயர்வு, அவை ஸ்ரீ பாத மலையை நோக்கிப் பயணிக்கின்றன என்ற பாரம்பரிய நம்பிக்கையையும் மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளது.

எனினும், நிபுணர்களின் விளக்கத்தின்படி, சில வண்ணத்துப் பூச்சிகள் இனப்பெருக்கத்திற்கான துணையைத் தேடி மலைகள் மற்றும் உயரமான இடங்களில் ஒன்றுகூடும் இயல்பைக் கொண்டுள்ளன. இந்த நடத்தைக்கு ‘Hill-topping’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஆனால், ஆய்வுகளின்படி பெரும்பாலான இடம்பெயர்வுகள் குறிப்பாக ஸ்ரீ பாத மலையை நோக்கிச் செல்வதில்லை. மாறாக, பல வண்ணத்துப் பூச்சிகள் வடமேற்குத் திசையை நோக்கிப் பயணிக்கின்றன.

இயற்கை அனர்த்தத்திற்கான முன்னெச்சரிக்கையா?

ஆயிரக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகள் ஒரே நேரத்தில் பறப்பதைத் தொடர்ந்து, நாட்டில் சூறாவளி அல்லது வேறு ஏதேனும் இயற்கை அனர்த்தம் ஏற்படுவதற்கான அறிகுறியாக இது இருக்கலாம் என்ற கருத்துக்களும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

எனினும், வண்ணத்துப் பூச்சிகளின் பெருமளவிலான இடம்பெயர்வுக்கும் எதிர்வரும் இயற்கை அனர்த்தங்களுக்கும் இடையில் உறுதிப்படுத்தப்பட்ட அறிவியல் தொடர்பு எதுவும் இல்லை என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வளிமண்டல அழுத்தம், ஈரப்பதன், வெப்பநிலை மற்றும் காற்றின் வேகம் போன்ற மாற்றங்களுக்கு வண்ணத்துப் பூச்சிகள் உணர்திறன் கொண்டிருந்தாலும், அவற்றின் இடம்பெயர்வை இயற்கை அனர்த்தத்திற்கான உத்தியோகபூர்வ முன்னெச்சரிக்கையாகக் கருத முடியாது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

வண்ணத்துப் பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறதா?

காலநிலை மாற்றம், ஒழுங்கற்ற மழைவீழ்ச்சி மற்றும் ஆக்கிரமிப்பு தாவர இனங்களின் பரவல் ஆகியவை வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்வுக்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களாக உள்ளன.

தற்போது பல பகுதிகளில் பெருமளவில் வண்ணத்துப் பூச்சிகள் காணப்பட்டாலும், வரலாற்றுடன் ஒப்பிடுகையில் அவற்றின் எண்ணிக்கையும் பாரிய இடம்பெயர்வு நிகழ்வுகளும் குறைந்துள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

எனவே, தற்போது இலங்கையின் பல பகுதிகளில் காணப்படும் ஆயிரக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகளின் நகர்வு, இயற்கையின் பருவகாலச் சுழற்சியின் ஒரு பகுதியாகவே கருதப்படுகின்றது. இது எதிர்வரும் இயற்கை அனர்த்தத்திற்கான அறிகுறி என்பதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை என நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore