இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்தவர்களில் மேலும் சுமார் 40 இலட்சம் பேர் வரி செலுத்துவோர் அடையாள இலக்கமான (TIN) இலக்கத்தைப் பெற்று பதிவு செய்ய வேண்டியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நந்தன குமார தெரிவித்துள்ளார்.
அத தெரணவின் ‘BIG FOCUS’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுவரை சுமார் 1.3 கோடி பேர் TIN இலக்கத்தைப் பெறுவதற்காகப் பதிவு செய்துள்ளதாகவும், இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 1.7 கோடியாகக் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, இன்னும் சுமார் 40 இலட்சம் பேர் TIN இலக்கத்தைப் பெற்று பதிவு செய்ய வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் TIN கட்டாயம்
கடந்த காலங்களில் சில அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மாத்திரமே TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டிருந்ததாக ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போதைய சட்ட ஏற்பாடுகளின்படி 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் TIN இலக்கத்தைப் பெற்றிருக்க வேண்டும் என அவர் விளக்கியுள்ளார்.
இதுதொடர்பில் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
TIN இலக்கம் பெற்ற அனைவரும் வரி செலுத்த வேண்டுமா?
TIN இலக்கத்தைப் பெற்று உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யும் ஒவ்வொருவரும் கட்டாயம் வரி செலுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை என ஆணையாளர் நந்தன குமார தெளிவுபடுத்தியுள்ளார்.
ஒருவர் TIN இலக்கத்தைப் பெற்றிருப்பது மட்டும் அவருக்கு வரி செலுத்த வேண்டிய பொறுப்பு ஏற்படுவதைக் குறிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வரி முறைமையை ஒழுங்குபடுத்துவதும், வரி நிர்வாகத்தை முறையாகக் கட்டமைப்பதுமே 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் பதிவு செய்யும் சட்ட ஏற்பாட்டின் பிரதான நோக்கம் எனவும் அவர் விளக்கியுள்ளார்.
எனவே, TIN இலக்கத்தைப் பெறுவது தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், இதுவரை பதிவு செய்யாத 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் மீண்டும் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.





