அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களைப் பயன்படுத்தியிருந்தமை மருத்துவப் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தஹம் பிரசாத் என அழைக்கப்படும் பலதுர ரங்கிரியலாகே பிரசாத் சுசந்த ஜயசிறி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்ட நபராவார்.
அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில் பொலிஸாருக்கும் பௌத்த தேரர்களுக்கும் இடையே அண்மையில் ஏற்பட்ட பதற்றமான சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அநுராதபுரம் புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட தேரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து வெளியேற்ற பொலிஸார் முயன்றபோது இரு தரப்பினருக்கும் இடையில் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் அந்தச் சூழ்நிலை மோதலாகவும் மாறியிருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கே மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் ஹெரோயின் மற்றும் கஞ்சா பயன்படுத்தியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





