இலங்கையில் 2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 1,07,829 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் அதிகளவிலான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். அந்த மாவட்டத்தில் இதுவரை 22,502 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அங்கு 20,799 பேர் டெங்கு தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
மூன்றாவது இடத்தில் கண்டி மாவட்டம் காணப்படுவதுடன், அங்கு இதுவரை 8,803 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
ஜூலை மாதத்தில் அதிகளவான பாதிப்பு
இவ்வாண்டில் மாதாந்த அடிப்படையில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கடந்த ஜூலை மாதத்தில் பதிவாகியுள்ளனர்.
அந்த மாதத்தில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 29,964 பேர் டெங்கு தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும், நவம்பர் மாதத்தின் முதல் சில நாட்களில் மாத்திரம் 1,577 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு காய்ச்சலால் 81 பேர் உயிரிழப்பு
இவ்வாண்டில் இதுவரை டெங்கு காய்ச்சல் காரணமாக 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கான சூழல் உருவாகக்கூடும் என்பதால், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வாரம்
இதற்கமைய, நவம்பர் 09ஆம் திகதி முதல் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு அகற்றுவதற்கும், சுற்றுச்சூழலைத் தூய்மையாகப் பேணுவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
எனவே, பொதுமக்கள் தமது வீடுகள், வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் நீர் தேங்கக்கூடிய பாத்திரங்கள், கொள்கலன்கள் மற்றும் கழிவுப் பொருட்களை அகற்றி, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும்.





